தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர், ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் எனும் இருபெரும் பதவிகளை சிரமப்பட்டு தூக்கிச் சுமப்பதோடு, முதல்வரின் நெருங்கிய உறவினர்! எனும் கெளரவத்தையும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக ஏந்திக் கொண்டு அரசியல் வீதிகளில் உலா வந்து கொண்டிருக்கிறார் கருப்பணன். ஆனால் கடந்த சில நாட்களாக அவரை கதற விட்டுக் கொண்டிருக்கிறது உட்கட்சி பஞ்சாயத்து ஒன்று. 

அதாவது அமைச்சர் கருப்பணனுக்கும், பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான  தோப்பு வெங்கடாசலத்துக்கும் நேருக்கு நேர் பகை எப்போதுமே உண்டு. இந்நிலையில், கடந்த தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க.வினர் சிலர் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டதாகவும், அவர்களை அமைச்சர் கருப்பணன் ஆதரிப்பதாகவும், இந்த உண்மையை எந்த கோயிலிலும் சத்தியம் செய்ய தயார் எனவும் வெங்கடாசலத்தின் டீம் அறிவித்தது. இதற்கு அமைச்சரும் ‘நானும் இந்த பொய்யை மறுத்து சத்தியம் செய்ய தயார்.’ என்று சொன்னார்.

  

உடனே எம்.எல்.ஏ. டீமோ “அமைச்சர் கருப்பணனின் சொந்த தொகுதியான பவானியில் உள்ள பெரிய கோயிலான சங்கமேஸ்வரர் ஆலயத்தில் இந்த சத்தியத்தை அரங்கேற்ற நாங்கள் தயார். அமைச்சரே தேதி ஃபிக்ஸ் பண்ணட்டும்” என்று சொல்லியிருக்கின்றனர். உடனே அமைச்சரும் “நான் அந்த கோயிலுக்கு வந்து சத்தியம் செய்ய தயார். எனக்கு ஆதரவாளர்களாக இருப்பவர்களை நான் எப்போதும் ஆதரிப்பேன். ஆனால், நான் சிலரை என் கல்லூரிக்கு அழைத்து ஆலோசனை நடத்தி சாப்பாடும் போட்டதாக சொல்லப்படும் பொய்யை மறுத்து சத்தியம் செய்ய கோயிலுக்கு வருவேன்.” என்றார். 

இதற்கு எதிர் டீமோ விடாமல் “அப்படின்னா, தினகரனுக்கு ஆதரவாக வேலை பார்த்தவங்களை ஆதரிப்பேன்னு வெளிப்படையாக சொல்கிறாரா அமைச்சர்?  கட்சிக்கு தான் செய்யும் துரோகத்தை ஒப்புக் கொள்கிறார். அவர் கண்டிப்பாக சத்தியம் செய்ய வந்தே ஆகணும். ஒருவேளை வராமல் போனாலோ அல்லது வந்து பொய் சத்தியம் செய்தாலோ அவரது அமைச்சர் பதவி காலி!” என்று ஏகத்துக்கும் பீதியை கிளப்பியுள்ளனர். பாவம் கதறிக்கிடக்கிறாராம் அமைச்சர் கருப்பணன்.