உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜின் உறவினர் வீட்டில் 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக உணவுத்துறை அமைச்சராக இருப்பவர் காமராஜ். இவரது சொந்த ஊர் மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளம். அமைச்சரின் மூத்த சகோதரர் நடன சிகாமணியின் சம்பந்தி மனோகரன். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சேரமங்கலத்தைச் சேர்ந்த மனோகரன், கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்தவர். 10 ஆண்டுகளாக அரசு ஒப்பந்ததாரராகச் செயல்பட்டு வருகிறார். சாலை அமைக்கும்பணி மேம்பாலம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்ததாரர் ஆவார். திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரயில்வே வழித்தட பணிகளைச் செய்து வருகிறார். 

இந்நிலையில் மனோகரனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், விடுதி, நீடாமங்கலம், கல்குவாரி மற்றும் திருகருக்காவூரில் உள்ள திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சாலை ஒப்பந்தத்தாரரான முதல்வர் சம்பந்தியின் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அமைச்சர் தங்கமணியின் உறவினர் வீடுகளிலும் சோதனை நடந்தது. குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

 

இதில் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்துவரும் நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது அமைச்சர் காமராஜின் நெருங்கிய உறவினருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.  வரிஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.