மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருவதாகவும் அரசு மானியமாக 75 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகத் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்றி வருவதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வந்த இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு செயல்படுத்த முயன்றும் அவர்களது முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்றார். ஆனால் தமிழக அரசு அந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். தமிழக எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினுக்கு அரசை குறை கூறுவதே வேலையாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

மேலும் முன்பெல்லாம் கோபேக் மோடி என்று கூறியவர்கள் தற்போது கம்பேக் மோடி என கூறுவதாக குறிப்பிட்டார்.  உலகம் முழுவதும் தமிழகத்தில் இருக்கும் மாமல்லபுரத்தை தற்போது புகழ்ந்து பேசி வருவதாகவும் பிரதமர் மோடி வேட்டி கட்டி சீன அதிபரை சந்தித்து வரவேற்கத்தக்கது என்றும் கூறினார்.

பிகில் பட ஆடியோ வெளியீட்டில் நடிகர் விஜய் ஜனநாயக முறையில் பேசியதாக குறிப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார் அதை ஜனநாயக முறையில் எதிர் கொண்டதாக தெரிவித்தார்.