தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் நேர்மையாக இருப்பதால்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு விவகாரத்தில் தப்பு செய்தவர்கள் மாட்டிக் கொண்டார்கள் என மமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களிடமிருந்து பேப்பருக்கு 10 ஆயிரம் ரூபாய் பெற்று அவர்களுக்கு கூடுதல் மார்க் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய பேராசிரியை உமா மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேடு மூலமாக இதுவரை 200 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மறுகூட்டலின் போது உமாவின் பேச்சை கேட்காத ஆசிரியர்களை உமா, அதிரடியாக பணியில் இருந்து நீக்கிவிட்டு தனது ப்ராடு வேலைக்கு ஒத்துழைக்கும் ஆசிரியர்களை மட்டுமே பணியில் அமர்த்தி இந்த ஹைடெக் ஊழலை செய்து வந்துள்ளார் என கூறப்படும் நிலையில் உமா உட்பட பல பேராசிரியர்களை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேடு விவகாரத்தில்   தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா சஸ்பெண்ட் செய்யபட்டு உள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்க செல்வதற்காக விமான நிலையம் வந்த அமைச்சர் ஜெயகுமாரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது, இது குறித்து உரிய விசாரணி நடைபெற்று வருகிறது என்றும்,பாரபட்சம் இல்லாமலும், வெளிப்பைடைத் தன்மையுடனும் இந்த ஊழல் விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருதாக அமைச்சர் கூறினார்.

இதையடுத்து, தப்பு செய்தவர்கள் எல்லாம் ஏன் மாட்டிக்  கொள்கிறார்கள் தெரியுமா என நிருபர்களிடம கேள்வி கேட்ட அமைச்சர் ஜெயகுமார், தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் நேர்மையாக நடந்து கொள்வதால்தான் தப்பை கண்டு பிடிக்க முடிகிறது என தெரிவித்தார்.