வரும் சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

கவிஞர் பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;-  வரும் சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு உத்தரவிட்டது ஜெயலலிதா ஆட்சியில் தான். முழுமையான மதிப்பீடு செய்துள்ளதால் சேதமடைந்த அனைத்து சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும் என்றார். 


மேலும், மக்களைக் காப்பாற்றுகின்ற, மக்களோடு மக்களாக இருக்கின்றவர்கள்தான் தலைவர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர். எம்ஜிஆர்-ஜெயலலிதா போன்றவர்கள் திமுக ஆட்சிக்காலத்தில் மேடையில் ஏறிக்கூட பேச முடியாத சூழல் இருந்தது. சோடா பாட்டில் வீச்சு, கற்கள் வீச்சு போன்றவை நடக்கும். அவ்வளவு தாக்குதல்களையும் தாண்டி எம்ஜிஆர் எத்தனை தடங்கல்கள், துன்பங்கள் வந்தாலும், நினைத்ததை சாதிப்பேன், திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்பதை சூளுரையாக கொண்டிருந்தார்.

தலைவர்களுக்கு அச்சுறுத்தல், உயிர் பயம் இருக்கக்கூடாது. ஆனால், 8 மாதம் வீட்டிலே இருந்துவிட்டு வெளியே வராமல், வாக்குகளுக்காக வெளியில் வருகிறார்கள் என்று சொன்னால், இது எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த 8 மாதங்களில் முதல்வர் பழனிசாமி உயிரை பணயம் வைத்து பணியாற்றினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.