திமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் துப்பாக்கி இருக்கும். மக்கள் திமுக எம்.எல்.ஏ.க்களைப்  பார்த்து பயப்படும் நிலை ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
  நிலத் தகராறு முன்விரோதம் காரணமாக நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் வட்டாரத்தில் இந்தச் சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து  தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், “திமுக ஒரு வன்முறைக் கட்சி. திமுக ஆட்சியில்தான் நில அபகரிப்பு எல்லாமே நடந்தது. ஏழைகளின் நிலங்கள் திமுக ஆட்சிக் காலத்தில் அபகரிக்கப்பட்டது. இப்போது திமுக துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு சென்றுவிட்டது. ஆட்சியில் இல்லாதபோதே இந்த நிலைமை என்றால், ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு திமுக எம்.எல்.ஏ.விடமும் துப்பாக்கி இருக்கும். மக்கள் திமுக எம்.எல்.ஏ.க்களைப்  பார்த்து பயப்படும் நிலை ஏற்படும்.
துப்பாக்கி கையில் இருக்கிறது என்பதற்காக எதற்கு வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் சுடலாம் என்பதை  நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. அதிமுகவினர் யாரிடமும் கள்ளத்துப்பாக்கி எதுவும் இல்லை. என்னிடம் உரிமத்துடன்கூடிய இரண்டு துப்பாக்கிகள் உள்ளன. இதுவரை அதை நான் பயன்படுத்தியதுகூட இல்லை” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.