அமைச்சர் மணிகண்டனை பதவியிலிருந்து நீக்கியது முதல்வரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். 

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து, மணிகண்டனிடமிருந்த தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதலாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. 

கேபிள் டிவி தலைவராக செயல்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியை தூக்கிவிட்டு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, அரசு கேபிள் தொலைக்காட்சியின் கட்டணம் அண்மையில் மாதத்துக்கு ரூ.130 என்ற அளவுக்குக் குறைக்கப்பட்டது. இதனை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

 

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அடிக்கடி அமைச்சரவையில் மாற்றம் செய்துவந்தார். இந்நிலையில், முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளிக்கையில் மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணம் எனக்கு தெரியாது. அமைச்சர் மணிகண்டனை பதவியிலிருந்து நீக்கியது முதல்வரின் அதிகாரத்திற்குட்பட்ட முடிவு என்றும் கூறினார்.