அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், அயோத்தியில் தொடங்கிய ராமராஜ்ஜிய ரத யாத்திரை, வரும் 25ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது. அந்த ரத யாத்திரை தமிழகத்திற்குள் வருவதற்கு, திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எஸ்டிபிஐ, தமமுக ஆகிய முஸ்லீம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் எதிர்ப்புகளை மீறி இன்று காலை நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் பகுதிக்குள் ரத யாத்திரை வந்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார்  கைது செய்துள்ளனர்.

மத நல்லிணக்கத்தை காக்கும் வகையில், ரத யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் என திமுக, விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு எந்த மதத்தினரும் ஊர்வலம் செல்லலாம். மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களை கடந்துதான் ரத யாத்திரை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. அங்கெல்லாம் பிரச்னை ஏற்படாத நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் எப்படி ஏற்படும்?

இந்த விவகாரத்தை அரசியலாக்கி, அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். எனவே இந்த ரத யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் அமைதியான முறையில் ரத யாத்திரையை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிவிடுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.