சிலை கடத்தல் வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடமிருந்து சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தெளிவான பதில் அளிக்காமல் கிளம்பிவிட்டார்.

சிலை கடத்தல்கள் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். பல கோடி மதிப்புமிக்க பல சிலைகளை மீட்டெடுத்தனர். இதனால் அறநிலைத்துறையில் பல உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்படவில்லை என்றும் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் அரசுக்கு ஒரு அறிக்கை கூட வழங்கவில்லை என்றும் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ தான் விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். சிலைகடத்தல் வழக்கை பொன் மாணிக்கவேல் திறம்பட கையாண்டு வருகிறார். அதில் சில விஐபிக்கள் சிக்க உள்ளனர். எனவே அவர்களை காப்பாற்றவே இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித்தலைவர்கள் ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் நினைவுதினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் பொன்.மாணிக்கவேல் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்துக்கு நிகரான திறமையான தரமான காவல்துறை. எனினும் இது சர்வதேச தொடர்புடைய வழக்கு என்பதால் சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்பதன் அடிப்படையில் தான் சிபிஐக்கு மாற்றப்படுவதாகவும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்பதே அரசின் விருப்பம். அதைத்தவிர உள்நோக்கம் எதுவுமில்லை என தெரிவித்தார். 

ஆனால், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மீது நம்பிக்கை இல்லை என்று கூறித்தானே, சிபிஐ வசம் ஒப்படைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த விஷயத்திற்குள் ஆழமாக செல்ல நான் விரும்பவில்லை என மழுப்பலாக பதிலளித்து அங்கிருந்து கிளம்பிவிட்டார். பொன்.மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லையா? என்பது தொடர்பான கேள்விக்கு தெளிவாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்கவில்லை.