தினகரன் தலைமையிலான அணி அல்ல; அது ஒரு சனி என அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறையை கவனித்துவரும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

தமிழகத்தின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், தனது தலைமையில் செயல்படும் அணிக்கான அமைப்பின் பெயரை அறிவித்து கொடியை ஏற்றுகிறார் தினகரன். மேலூரில் தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் தொடங்கி நடந்துவருகிறது.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், தனது அமைப்பின் பெயரை அறிவிக்க இருக்கிறார் தினகரன். பட்ஜெட் பரபரப்பையும் பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் பட்ஜெட்டையும் நீர்த்துப்போக செய்யும் வகையில், தினகரன் அதிரடியாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் தினகரனின் புதிய இயக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தினகரன் அணி என்பது அணி அல்ல; அது ஒரு சனி, பிணி.. அந்த பிணியை நாங்கள் நீக்கிவிட்டோம். கொள்ளைக்கூட்ட கும்பலை விளக்கிவிட்டு சிறப்பாக செயல்படுகிறோம். அதிமுக ஒரு சிங்கம். அதில் வந்து உட்கார்ந்திருந்த கொசுதான் தினகரன். அந்த கொசுவை விரட்டிவிட்டோம் என ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார்.