சுண்ணாம்பு பட்ட கண்ணில் எதுவும் தெரியாதது போல், திமுக தலைவர் ஸ்டாலின் கண் இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

முத்துராமலிங்கர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் முயற்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், காழ்புணர்ச்சியோடு குற்றம் சாட்டுகின்ற மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பூட்டு போடுகின்ற வகையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் அதிமுகவிற்கு வெற்றியை தந்திருப்பதாகவும் கூறினார். 

திமுக ஆட்சியிலிருந்த போது இதுபோன்ற மீட்பு பணிகளை அவர்கள் மேற்கொண்டது உண்டா? போர்கால அடிப்படையில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டது. தொடர்ந்து மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசினால் அடுத்து வரும் தேர்தல்களிலும் மக்கள் இதையே செய்வார்கள். தன் கண்ணில் சுண்ணாம்பை வைத்துக்கொண்டு ஸ்டாலின் பார்க்கிறார். அதனால் அவர் கண்ணுக்கு எதுவும் தெரிவதில்லை” என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசின் நல்ல செயல்களை மூடிமறைத்து அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்றும் நினைத்தால் நிச்சயம் வருகிற தேர்தலில் மு.க.ஸ்டாலின் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுவார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் குறித்துப் பேசிய அவர், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். மின்னணு வாக்குப்பதிவுகள் வரவில்லை என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டவுடன் உள்ளாட்சித் தேர்தல் உடனே நடைபெறும் என்று தெரிவித்தார்.