Minister Jayakumar asked rajinikanth is a Engineer
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று சொல்லும் நடிகர் ரஜினிகாந்த் என்ன பொறியியல் பட்டதாரியா என அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பினார். பொத்தாம் பொதுவாக அவர் கூறுவது தவறானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சிஸ்டம் சரியில்லை என்று கூறுகிறீர்களே, அது தமிழ்நாட்டில் மட்டுமா ? அல்லது இந்தியா முழுவதுமா ? என செய்தியாளர்கள் நடிகர் ரஜினிகாந்த்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், முதலில் தமிழகத்தில் உள்ள சிஸ்டத்தைத்தான் சரி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது, ரஜினிகாந்த் கூற்றுப்படி தமிழ்நாட்டில் மட்டும்தான் சிஸ்டம் சரியில்லையா ? என கேள்வி எழுப்பினார்.
இந்தியா முழுவதுமே சிஸ்டம் சரியில்லை… அதற்கு ரஜினி என்ன செய்யப் போகிறார் ? என குறிப்பிட்ட சீமான், சிஸ்டம் சரியில்லாமல் போனது இப்போதுதான் ரஜினிக்கு தெரிந்ததா ? என்றும் கேள்வி எழுப்பினார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம் எம்.பி.., நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்குள் வந்த பார்த்தால் தானே தெரியும் இங்கு சிஸ்டம் எப்படி இருக்கிறது ? என்று என தெரிவித்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று சொல்லும் நடிகர் ரஜினிகாந்த் என்ன பொறியியல் பட்டதாரியா? என கேள்வி எழுப்பினார். பொத்தாம் பொதுவாக சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியிருப்பது தவறு என்றும், அவர் தனது மனம் போல் பேசக்கூடாது என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
