தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்காக அரசு சார்பில் ஏராளமான உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. யாரும் பசியோடு தவிக்க கூடாது என்பதற்காக அம்மா உணவகங்கள் மூலம் உணவகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உணவின் தரம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். 

சென்னையில் உள்ள அம்மா உணவகம் மூலம் 11 லட்சம் பேர் பசியாறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து பசியால் வாடும் ராயபுரம் தொகுதி மக்களுக்காக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நாளை முதல் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை ராயபுரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பிற்காக 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வேலைக்குச் சென்று சம்பாதிக்க இயலாத நிலையில் உள்ள ராயபுரம் தொகுதி மக்களின் குடும்பத்தினருக்கு, ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா உணவகங்களில் காலை, மதியம், இரவு என 3 வேலைக்கு கட்டணம் இல்லாமல் உணவு அருந்த ஏற்பாடு செய்துள்ளேன். இந்த வசதியை உணவகத்தின் அருகில் உள்ள பிற தொகுதி மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அம்மா உணவகங்களில் அவர்கள் உண்ணும் உணவிற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும், அதற்குண்டான கட்டணத்தை நான் செலுத்திவிடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நாள் வரை  பொதுமக்கள் இந்த வசதியை பின்பற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார், அம்மா உணவகத்தில் உணவு வாங்கும் சமயத்தில் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.