கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழக அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக இருந்தவர் துரைக்கண்ணு. தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்திருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் எல்லோரும் சர்வ சாதாரணமாக மாற்றப்படுவார்கள். ஆனால், இந்த அதிமுக ஆட்சியில்தான் அமைச்சராகப் பொறுப்பேற்ற பெரும்பாலானோர் முழு பதவிக் காலத்தையும் அனுபவிக்கும் சூழ்நிலையில் உள்ளனர். முதன் முறையாக அமைச்சரான துரைக்கண்ணுவும் அந்த லிஸ்டில் சேர்ந்திருக்க வேண்டியவர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்றால் மரணமடைந்துவிட்டார்.
துரைக்கண்ணுவை ஒரு தோல்விதான் இந்த சட்டப்பேரவை காலத்தில் அவரை அமைச்சராக்கியது. தஞ்சை அரசியலில் துரைக்கண்ணு சீனியர் என்றாலும், ஆர். வைத்தியலிங்கத்தின் கைதான் கடந்த 20 ஆண்டுகளாக ஓங்கியிருக்கிறது. துரைக்கண்ணு முதன் முறையாக 2006-ம் ஆண்டில் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 2011-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றார். ஆனால், தஞ்சை மாவட்டத்தில் அமைச்சர் பதவி ஆர்.வைத்தியலிங்கத்துக்குதான் வழங்கப்பட்டது. ஏனென்றால், 2001-2006 காலத்திலேயே வைத்தியலிங்கம் அமைச்சராக இருந்தவர் என்பதாலும் அதிமுகவில் செல்வாக்காக இருப்பவர் இருந்ததாலும் அமைச்சர் பதவி அவருக்கெ சென்றது.
கடந்த 2016-ம் ஆண்டில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட ஆர். வைத்தியலிங்கம் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதனால், வைத்தியலிங்கத்தால் அமைச்சராக முடியாமல் போனது. தஞ்சை மாவட்டத்திலிருந்து வேறு ஒருவரை அமைச்சராக்கும் நிலை வந்தபோது, மூன்றாவது முறையாக 2016-ம் ஆண்டிலும் பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற துரைக்கண்ணுவை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. பாபநாசம் தொகுதி முழுக்க முழுக்க விவசாய பூமி என்பதால், வேளாண் துறை அமைச்சர் பதவியை துரைக்கண்ணுவுக்கு ஒதுக்கினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலும் துரைக்கண்ணு இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.