வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு (72), கடந்த அக்டோபர் 13ம் தேதி, தீவிர மூச்சுத் திணறல் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதோடு அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சிடி ஸ்கேன் எடுத்ததில் அவரது நுரையீரல் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக அவர் சிகிச்சை பெறும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதையடுத்து நேற்று அமைச்சர்கள் சி.வி. சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இந்நிலையில், அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளதாக மருத்துவமனை சார்பில் மீண்டும் அறிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து காவேரி மருத்துவனையில் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவருக்கு ஏற்கனவே உள்ள இணை நோய்கள் காரணமாக முக்கிய உடல் உறுப்புகள் சீராக செயல்படுவது சவாலாக உள்ளது. அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேர கண்காணிப்புக்கு பிறகே அமைச்சர் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து தெரிவிக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.