ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அது குறித்து தம்மால் எதுவும் உறுதியாக கூறமுடியாது என கைவிரித்து விட்டார் அனில் மாதவ் தவே.

செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் ஜல்லிக்கட்டு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

இது தொடர்பான தீர்ப்பு அல்லது உத்தரவு வந்தால் மட்டுமே மதிய அரசால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் அவர்.

மேலும் தமிழக மக்களின் உணர்வுகளை நீதிமன்றம் மதிக்கும் என தாம் நம்புவதாகவும் தவே தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தேவைப்பட்டால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் காளைக்கான தடையை நீக்கவேண்டும் என்றும் காட்சிபடுத்தப்பட்ட விலங்கினப் பட்டியலில் இருந்து காளையை நீக்கவேண்டும் எனவும் மத்திய அரசு தரப்பில் கோரிக்கை விடுத்திருப்பதாக தவே கூறினார்.

எது எப்படியிருந்தாலும் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தேவையான நடவடிக்கைள் எடுக்கப்படும் என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நிறைவு செய்தார் மத்திய சுற்றுசூழல் அமைச்சர் தவே.