அதிமுக கொடி நிறத்தையும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்தையும் அமமுகவினனர் பயன்படுத்த தடை விதிக்க கோரி அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

டெல்லியில் இன்று தேர்தல் ஆணையத்திடம் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் மனு ஒன்றை அளித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் இரட்டை இலை, அ.தி.மு.க. ஆகியவற்றை சொந்தம் கொண்டாடிய தினகரன் கட்சியினர் தற்போது தங்களது அ.ம.மு.க. கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்து உள்ளனர். மேலும் உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க.வுக்கும், இரட்டை இலைக்கும் உரிமை கொண்டாட மாட்டோம் என உறுதி அளித்துள்ளனர்.

 

ஆனால் அதற்கு மாறாக அ.தி.மு.க. கொடி, ஜெயலலிதா படம் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். மேலும் அ.தி.மு.க. கரை வேட்டியை அக்கட்சியினர் கட்டி வருகின்றனர். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் மே 19-ம் நடத்த வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். 

இத தொடர்பாக டிடிவி.தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கரை வேட்டிக்கு எல்லாம் எந்த கட்சிக்கு எதையும் பதிவு செய்யவில்லை. அமமுக கொடியில் அதிமுக கொடியின் நிறத்தைப்போன்றே கருப்பு, சிவப்பு நிறங்கள் உள்ளன. கருப்பு சிவப்பு நிறங்கள் உள்ளதைப் போன்று இரு மடங்கு அளவு பெரிதாக வெள்ளை நிறம் நடுவே இடம்பெற்றுள்ளது.

அதிமுக கொடியில் அண்ணாதுரையின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். அமமுக கொடியில் ஜெயலலிதாவின் உருவம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர் வழக்கறிஞராக இருந்தால் கொஞ்சம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சரியாக படிக்க சொல்லுங்கள் என விமர்சனம் செய்துள்ளார்.