திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், இருந்து சின்ன காவனம் மற்றும் பெரிய காவனம் ஆகிய கிராமங்களுக்கு தினமும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர்.


சாலை வழியாக இந்த கிராமங்களுக்கு செல்ல சுமார் 2 கி.மீ. தூரம் சுற்றி செல்லவேண்டும். இதனால், மக்கள் பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து சென்று வந்தனர். இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது.


பொன்னேரி - குன்னம்மஞ்சேரி சாலையில் மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறையும், தமிழக அரசும் திட்டமிட்டது. இதையடுத்து, அந்த சாலையில் இருபுறமும் இருந்த சுமார் 40 வீடுகள் அகற்றப்பட்டன.


இதை தொடர்ந்து மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் ஜூலை மாதம் மேம்பால பணிகள் முடிந்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த இடம் தங்களுக்கு ஏற்றதாக இல்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு நெடுந்தூரம் சென்று வரவேண்டியுள்ளது. எனவே, அருகாமையில் நிலம் வழங்கும்படி அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்நிலையில், பொன்னேரி ஆர்டிஓ அலுவலகத்தில் இன்று பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஊரக மற்றும் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமீன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து, அமைச்சர் புறப்பட்டார்.


அப்போது, அவரை முற்றுகையிட்ட மக்கள், தங்களுக்கு உரிய இடத்தில் வீடு கட்டுவதற்கு நிலம் தர வேண்டும் என கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். அதன்பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.