சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்றா..? அமைச்சரின் நேர்முக உதவியாளர் விளக்கம்!
'' வழக்கமான உடல் பரிசோதனைக்காகத்தான் அமைச்சர் சென்னையில் தங்கி வருகிறார். இந்தச் சூழலைப் பயன்படுத்தி அமைச்சருடைய உடல்நிலை குறித்து தவறான வதந்திகளை விஷமிகள் பரப்பியுள்ளனர். கடந்து சில நாட்களுக்கு முன்பாக அவர் கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என்று மருத்துவக் குறிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் தவறானவை''.
சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கொரோனா தொற்று என்று பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று அவருடைய நேர்முக உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் பிடித்துள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாமல், மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் என கொரோனா ஒழிப்பு பணியில் முன்களத்தில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனா வைரஸால் உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதேபோல கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் இன்று உயிரிழந்தார். இந்நிலையில் ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது.
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்று தகவல்கள் வெளியாயின. அதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கொரோனா தொற்று என்பதை அவருடைய நேர்முக உதவியாளர் ராஜாராமன் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், '' வழக்கமான உடல் பரிசோதனைக்காகத்தான் அமைச்சர் சென்னையில் தங்கி வருகிறார். இந்தச் சூழலைப் பயன்படுத்தி அமைச்சருடைய உடல்நிலை குறித்து தவறான வதந்திகளை விஷமிகள் பரப்பியுள்ளனர். கடந்து சில நாட்களுக்கு முன்பாக அவர் கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என்று மருத்துவக் குறிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் தவறானவை'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே.பி. அன்பழகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் என்று தகவல் வெளியானது. ஆனால், பின்னர் அந்தத் தகவலை அமைச்சர் கே.பி. அன்பழகனே மறுத்தார். இந்நிலையில் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கொரோனா தொற்று என்ற தகவல் மறுக்கப்பட்டுள்ளது.