கொரோனா விஷயத்தில் சித்தமருத்துவம் நன்றாக கைகொடுத்திருக்கிறது என தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அருமையான சுறுசுறுப்பான அமைச்சர் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லையில் இன்று கொரோனா பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக  நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், 196.75  கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள திட்டங்களையும் தென்காசி மாவட்டத்திற்கான 78.77 கோடி மதிப்பிலான திட்டங்களையும் துவக்கி வைத்தார். வீட்டுமனை பட்டா, அம்மா இரு சக்கர வாகனம், வேளாண்மை இயந்திரங்கள் என அனைத்து துறைகளின் சார்பிலும் 5,982 பயணிகளுக்கு 36 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர் கூறியதாவது:- கொரோனா நெருக்கடி காலத்திலும் மக்கள்  நல்ல திட்டங்கள் தொடர்கிறது, விவசாயிகள், தொழில் முனைவோர் வைத்த பல்வேறு கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து நிறைவேற்றும். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது, குறிப்பாக பிளாஸ்மா வங்கி துவக்கப்பட்டு பிளாஸ்மா தானம் பெறப்பட்டு கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வைரசால் பாதித்தவர் சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பிய பின்னர்,  நிச்சயம் அவர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். இதன் மூலம் பல உயிர்களைகாப்பாற்றமுடியும் என்றார்.

 

அதேபோல் கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும், அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழகம் உள்ளது என்ற அவர். வேகமாக இ- பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், முறையாக அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோருக்கு நிச்சயம் இ-பாஸ் வழங்கப்படும் எனவும் கூறினார். மத்திய அரசு தனியாக ஆயுஸ் என பிரிவை ஆரம்பித்திருக்கும் நிலையில், மாநிலத்தில் சித்த மருத்துவத்திற்கு என தனியாக அமைச்சகம் அமைக்கும் திட்டம் இருக்கிறதா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அமைச்சர் விஜயபாஸ்கர் அருமையான, சுறுசுறுப்பானவர் என கூறியுள்ளார். இது அமைச்சர் விஜயபாஸ்கரின் பணிக்கு கிடைந்த அங்கிகாரமாக கருதப்படுகிறது.