அதிமுகவுக்கு ஆதரவாக ஒரு எம்.எல்.ஏ.வை உள்ளே கொண்டுவந்தால், நீதிமன்றம் மூலம் ஒரு எம்.எல்.ஏ. வெளியே போய்விட்டாரே என்ற சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது ஆளும் தரப்பு.

தமிழகத்தில் ஏற்கனவே 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இடைத்தேர்தல் நடந்தால் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் ஆட்சியைத் தக்க வைத்துகொள்ள முடியும் என்ற நெருக்கடியில் ஆளும் தரப்பு இருக்கிறது. இதனால், கையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களைத் தாண்டி அதிருப்தி எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் வழிக்குக் கொண்டுவரும் வேளையையும் ஆளும் தரப்பு செய்துவந்தது. 

தினகரனிடம் சென்ற 18 எம்.எல்.ஏ.க்கள் தவிர மேலும் அறந்தாங்கி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவில் இருந்தபடியே தினகரன் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இவர்களைத் தங்கள் வழிக்குக்கொண்டு வர ஆளும் தரப்பு முயற்சி செய்துவருகிறது. நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு திடீரென வெளிநடப்பு செய்து அரசுக்கு எதிராக இருப்பதாக தன்னை காட்டிகொண்டார். இருந்தாலும் தங்கள் வழிக்குக் கொண்டுவரும் முயற்சியை விடாமல் செய்துகொண்டிருக்கிறது. 

திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகருமான கருணாஸூம் ஆளுங்கட்சிக்கு எதிராக இப்படித்தான் போக்குக் காட்டிகொண்டிருந்தார். ஆனால், ஆளும் தரப்பு அவரிடம் தொடர்ச்சியாகப் பேசி தங்கள் வழிக்குக் கொண்டுவந்துவிட்டது. இதேபோல தினகரனுக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.க்களை வழிக்குக் கொண்டு வரும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அரசுக்கு சிக்கல் வராமல் இருக்க ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் பாதுகாத்து தங்கள் வழிக்குக் கொண்டுவரும் தீவிர முயற்சியில் ஆளும் தரப்பு இறங்கியிருந்த வேளையில், அமைச்சர் பாலகிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தண்டனை அதிமுகவை பெரும் சோகத்தில் தள்ளியிருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி கிரிமினல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றால், அந்த நிமிடமே மக்கள் பிரதிநிதி என்ற பதவியை இழக்க நேரிடும் என்பதால், பாலகிருஷ்ணா வகித்துவந்த எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இந்தத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்தவுடன், அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்படும். 

ஏற்கனவே அதிமுக கைப்பற்றிய 19 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இப்போது இந்த எண்ணிக்கை 20-ஆக அதிகரிக்க உள்ளது. சான் ஏறினால் முழம் சறுக்கும் என்ற கதையாக, ஒரு எம்.எல்.ஏ.வை வழிக்குக் கொண்டுவந்தால், இன்னொரு எம்.எல்.ஏ. பதவி காலியாகிவிட்டதே என்று ஆளும் கட்சி சோகத்தில் உள்ளது. இதன்மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் 21 தொகுதிகளில் இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளும் கட்சிக்கு ஆளாகியுள்ளது. 

தேர்தலில் குறைந்தபட்சம் 9 - 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் மே மாதத்துக்குப் பிறகு ஆட்சியை அதிமுக  தக்க வைக்க முடியும். இதேபோல 2017-ல் நடந்த அரசின் நம்பிக்கைக்கோரும் வாக்கெடுப்பில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இவர்களிடன் பதவியை கட்சி தாவல் தடைச் சட்டத்தின்படி பறிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது தனிக்கதை.