தமிழக அரசியல் வரலாற்றிலேயே அமைச்சராக இருக்கும் ஒருவர் பேருந்து மீது கல் வீசியது போன்ற ஒரு பெட்டி கேசில் தண்டனை பெற்றிருப்பது தற்போது தான் நடைபெற்றுள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு பா.ஜ.க தொண்டராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி ஓசூர் அருகே கள்ளச்சாரயத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று இருந்தவார். அவர்களை கைது செய்து அழைத்துச் செல்ல பேருந்துகள் வரவழைக்கப்பட்ட நிலையில், அந்த பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டன. இதில் ஏராளமான பேருந்துகள் சேதம் அடைந்தன. அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.  

பாலகிருஷ்ணா ரெட்டி பின்னர் அ.தி.மு.கவில் இணைந்து கடந்த தேர்தலில் வென்று அமைச்சராகவும் ஆன பிறகும் 1998ம் ஆண்டு முதல் ஓசூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை எதிர்கொண்டு வந்தார். அமைச்சர் பதவியேற்றே கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், அந்த பெட்டி கேசை பாலகிருஷ்ணா ரெட்டி ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆனால் அண்மையில் சென்னையில் திறக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் தான் பாலகிருஷ்ணா ரெட்டியின் அரசியல் வாழ்வுக்கே எமனாகியுள்ளது. 

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இதே நீதிமன்றம் தான் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவுக்கு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த நிலையில் அமைச்சருக்கு பேருந்து மீது கல் வீசிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.  இந்த சிறை தண்டனை மூலமாக பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சர் பதவியை இழப்பது உறுதி. அமைச்சர் ஒருவருக்கு எதிரான வழக்கில் அரசு வழக்கறிஞரும், போலீசாரும் திறம்பட செயல்பட்டு தண்டனை பெற்றுக் கொடுத்திருப்பது தான் தற்போது ஹாட் டாபிக். ஏனென்றால் அமைச்சருக்கு எதிரான வழக்கு என்றால் நீதிமன்றத்தில் அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராவதே பெரிது.

ஆனால் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு எதிராக ஆஜரானது மட்டும் இன்றி ஆதாரங்களையும் எடுத்துக் கொடுத்து தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார் என்றால் மேலிட உத்தரவு இல்லாமல் இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்கிறார்கள் பாலகிருஷ்ணா ரெட்டி ஆதரவாளர்கள். போலீஸ்துறையை கவனித்து வருவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். அந்த துறைக்கு உட்பட்ட அதிகாரிகள் தான் அமைச்சருக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பாலகிருஷ்ணா ரெட்டிக்கு இல்லை என்கிற முடிவுக்கு நாம் எளிதாக வந்துவிடலாம். இதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது தான் அமைச்சரவை சில மாதங்களுக்கு முன்னர் மாற்றப்பட்ட போது பாலகிருஷ்ணா ரெட்டியின் இலாக்கா மாற்றப்பட்டது நம் நினைவிற்கு வருகிறது.

கால்நடைத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டியிடம் இருந்து அந்த துறை பறிக்கப்பட்டு உப்பு சப்பில்லாத விளையாட்டுத்துறை கொடுக்கப்பட்டது. இதற்கு காரணம் பாலகிருஷ்ணா ரெட்டி சசிகலா தரப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து தான் என்று கூறப்பட்டது. அதன் பிறகும் கூட பாலகிருஷ்ணா ரெட்டி சசிகலா தரப்புடன் சவகாசத்தை தொடர்ந்ததாக சொல்லப்படுகிறது.  மேலும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சொந்தமான பங்களாவில் தான் தங்கிச் சென்றார் என்கிற பேச்சும் கூட அடிபட்டது. இதனால் தான் பேருந்து மீது கல் வீசிய வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு அரசின் ஆதரவு கிடைக்கவில்லை என்கிறார்கள்.