Asianet News TamilAsianet News Tamil

திரும்பத் திரும்ப பேசுற நீ! திரும்பத் திரும்ப பேசுற நீ!: எம்.எல்.ஏ. மீது கடுப்பான அமைச்சர்... 

Minister Anger On ADMK Carders for Ragupathy Dead
Minister Anger On ADMK Carders for Ragupathy Dead
Author
First Published Nov 28, 2017, 7:35 PM IST


கோயமுத்தூரில் வரும் டிசம்பர் 3-ம் தேதியன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. இதற்காக சிட்டியின் முக்கிய சாலையான அவிநாசி ரோடு முழுக்க பேனர்களையும், அலங்கார வளைவுகளையும் வைக்கும் பணியை துவக்கி இருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இதில் ஹோப்காலேஜ் பகுதியில் அமைக்கப்பட இருந்த அலங்கார வளைவுக்காக சவுக்கு கட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு கட்டை வெளியே நீட்டிக் கொண்டிருந்திருக்கிறது. 

இந்நிலையில் அமெரிக்காவில் பணிபுரியும் சாஃப்ட் வேர் எஞ்சினியரான ரகுபதி, பெண் பார்ப்பதற்காக கோவை வந்திருந்தார். பழநி செல்வதற்காக டூ வீலரில் வந்தவர் ஹோப் காலேஜ் பகுதியிலிருந்த அலங்கார வளைவின் சவுக்கு கட்டை பட்டு கீழே விழ, ஒன்வேயில் வந்த லாரி அவர் மீதி ஏறிவிட்டது. இந்த குரூர விபத்தில் ரகுபதி பலியாகிவிட்டார். 

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி, சர்வாதிகாரமாக கோயமுத்தூரில் அ.தி.மு.க.வினர் பேனர்களை வைப்பதன் விளைவாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தி.மு.க. உள்ளிட்ட சர்வ கட்சிகளும் கொந்தளித்திருக்கின்றன. 
இதில் கோயமுத்தூரை சேர்ந்த சிங்காநல்லூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான கார்த்தி என்பவர் நீதிமன்றம் வரை இதை கொண்டு சென்றிருக்கிறார்.

Minister Anger On ADMK Carders for Ragupathy Dead

இந்நிலையில் கார்த்தி மீது கடும் எரிச்சலில் பாய்ந்திருக்கிறார் கோயமுத்தூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உள்ளாட்சி துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி.

அவர் “தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்தி வேண்டுமென்றே என் விஷயத்தில் வதந்தி கிளப்பிக் கொண்டிருக்கிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் என் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்துவதாக ஒரு தனியார் டி.வி.யில் செய்தி வெளியானது. இந்த பொய் தகவலை எம்.எல்.ஏ. கார்த்தி உள்ளிட்ட சிலர்தான் பரப்பினார்கள்.

அதேபோல் இப்போது ரகுபதியின் மரணத்தையும் விபரீதமாக திரித்துக் கூறுகிறார்கள். 
இறந்து போன ரகுபதி எனது உறவினர்தான். அவரது குடும்பம் வேதனையில் இருக்கிறது. இந்த தகவல் கிடைத்ததும், என்னதான் நடந்தது என்று முழுமையாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தேன். தவறு முழுக்க லாரி டிரைவரின் மேல்தான் உள்ளதாக போலீஸ் விசாரித்து கூறியிருக்கிறது.

நீண்ட தூரத்துக்கு ஒன்வேயில் வந்த அந்த லாரிதான் ரகுபதியை அடித்துவிட்டு நிற்காமல் சென்றிருக்கிறது. போலீஸ் தீர விசாரித்து தேடி அந்த லாரி டிரைவர் மோகனை கைது செய்துவிட்டார்கள். 

உண்மை இப்படியிருக்க, இந்த விபத்தை உள்நோக்கத்தோடு அரசியலாக்குகிறார் தி.மு.க. கார்த்தி. 

திரும்பத்திரும்ப என் மீது அவதூறு கிளப்புகிறார். இந்த வேலையை அவர் தொடர்ந்தால், அவர் மீது வழக்கு தொடர்வேன்.” என்று பொங்கி முடித்திருக்கிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios