சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் தலைமையில் விருதுநகர் மாவட்ட அதிமுகவினர் பலர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தவர் ராஜவர்மன், சாத்தூர் எம்எல்ஏ சுப்ரமணி தினகரன் பக்கம் சென்றதால் நடைபெற்ற இடைத்தேர்தலில் ராஜவர்மனுக்கு சீட் வாங்கிக் கொடுத்தார் ராஜேந்திர பாலாஜி. வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன பிறகும் ராஜவர்மனை அமைச்சர் ஒருமையில் பேசி வந்தார். கட்சியினர் முன்னிலையில் எம்எல்ஏவான தன்னை ஒருமையில் பேச வேண்டாம் என்று ராஜவர்மன் கூற அமைச்சருடன் மோதல் வெடித்தது. அப்போது முதலே அமைச்சருக்கு எதிராக ராஜவர்மன் காய் நகர்த்த ஆரம்பித்தார்.

இந்த சூழலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உள்ளடி வேலைகளால் பாதிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள், மற்றும் அரசு கான்ட்ராக்ட் கிடைக்காத நிர்வாகிகள் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுடன் சேர்ந்து ராஜேந்திர பாலாஜியை எதிர்க்க ஆரம்பித்தனர். இந்த சூழலில் ஏட்டிக்கு போட்டியாக பேசிய விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில் எப்படியாவத விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியை பிடிக்க ராஜவர்மன் காய் நகர்த்தினார்.

ஆனால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூலமாக மறுபடியும் எடப்பாடியின் செல்லப்பிள்யைக விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக பதவியை பெற்றார் ராஜேந்திர பாலாஜி. அதன் பிறகு விருதுநகர் மாவட்ட அதிமுகவை இரண்டாக பிரித்து தனக்கு வேண்டி ஒருவரை மாவட்டச் செயலாளர் ஆக்கியதுடன் ராஜவர்மன் ஆதரவாளர்களை ஒட்டு மொத்தமாக பதவிகளை பறித்து விரட்டி அடித்தார் ராஜேந்திர பாலாஜி. இதனால் பல நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் பதவிகளை ராஜவர்மன் ஆதரவாளர்கள் இழந்தனர்.

இந்த நிலையில் பதவி பறிபோன அதிமுக நிர்வாகிகள், ராஜேந்திர பாலாஜியால் பாதிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஒட்டு மொத்தமாக ராஜவர்மன் பின்னால் அணிவகுத்தனர். இதனை அடுத்து ராஜேந்திர பாலாஜி அதிருப்தியாளர்கள் கூட்டத்தை ராஜவர்மன் சாத்தூரில் கூட்டினார். கூட்ட அரங்கே போதாத அளவிற்கு அதில் அதிமுக தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது பேசிய ராஜவர்மன், தற்போது அமைச்சராக உள்ள ராஜேந்திர பாலாஜியை எம்எல்ஏ ஆக்கியுதே அமைச்சர் உதயகுமார் தான். ஆனால் அந்த நன்றியை மறந்து தற்போது ராஜேந்திர பாலாஜி செயல்பட்டு வருவதாக கூறினார்.

மேலும் அமைச்சர் கட்சிக்காரர்கள் மட்டும் அல்ல, அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளை கூட ஒருமையில் பேசுகிறார். எல்லாவற்றுக்கும் ஒரு அளவு உண்டு. ஒரு எம்எல்ஏவான தனக்கு மதிப்பு கொடுங்கள் என்று கூறியதற்காக என்னை விரட்டி விரட்டி தொந்தரவு செய்கிறார்கள். நள்ளிரவு போன் செய்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். என்னை கொலை செய்து ஜாதிக்கலவரத்தை ஏற்படுத்துவேன் என்று அமைச்சரே மிரட்டுகிறார். மேலும் என்னை கொலை செய்துவிட்டு உடன் இருப்பவர்களை கேஸில் சேர்த்துவிடுவேன் என்று அமைச்சர் பேசியுள்ளார் அதற்கு ஆதாரம் உள்ளது.

இத்தகைய மனிதர் அடுத்த தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் எங்கு நின்றாலும் தோற்பார். விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளேன். அப்போது ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கடுகடுத்துள்ளார் ராஜவர்மன். நாளுக்கு நாள் விருதுநகர் மாவட்ட அதிமுக கோஷ்டிபூசல் அதிகமாகி வரும் நிலையில் தேர்தல் நேரத்தில் எப்படி சமாளிப்பது என்று அதிமுக தலைமை விழிபிதுங்கி நிற்கிறது.