எம்ஜிஆர் உடன் இருந்ததால் தான் அண்ணா இந்த நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். 

எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் அதிமுக அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது. விருதுநகரில் தேசபந்து மைதான திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்ணா பக்கத்தில் எம்ஜிஆர் இருந்ததால் தான் அண்ணா இந்த நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டு முதலமைச்சராக்கப்பட்டார். எம்ஜிஆரை பார்த்துத்தான் அண்ணாவிற்கே ஓட்டு போட்டார்கள் என குறிப்பிட்டார். 

அதன்பின், கலைஞருக்கும் எம்ஜிஆரால்தான் ஓட்டு போட்டார்கள். திமுகவிற்கு எம்ஜிஆர் இருந்ததால்தான் ஓட்டு விழுந்தது. அவரைத் தூக்கி எறிந்த பிறகு,  கருணாநிதியால் முதலமைச்சராக முடியவில்லை. மேலும், பேசிய அவர், கொடுக்கின்ற கட்சி அதிமுக. அதைக் கெடுக்கின்ற கட்சி திமுக. திமுக காரங்க யாருக்கும் வேஷ்டி, சேலைன்னு தரமாட்டாங்க. சேலைன்னு கொடுத்தாலும் கட்சிக்காரங்க கொண்டு போயிடுவாங்க என விமர்சித்தார்.

வாழ்க அண்ணா நாமம் எனச் சொல்லியே அரசியலில் வெற்றி கண்டார் எம்.ஜி.ஆர். அண்ணா நாமத்தை ஜெயலலிதாவும் உச்சரிக்கத் தவறியதில்லை. கட்சியின் பெயரில் அண்ணா இருக்கிறார்; கொடியிலும் அவர் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது. அண்ணா நீ என் தெய்வம் என சினிமாவிலும் எம்.ஜி.ஆரால் போற்றப்பட்டவர், அண்ணா. இத்தனை பெருமைக்குரிய அண்ணாவை, எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா மேடையில் தமிழக அமைச்சர் ஒருவர் அப்படி பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.