கன்னியாகுமரி குழித்துறையில் உள்ள அறிஞர் அண்ணா சிலையில் காவிக் கொடி புதுவையில் எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவித் துண்டு அணிவித்தது. அதற்குமுன் கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியார் சிலைக்குக் காவி சாயம் பூச்சு. அதற்கு சில மாதங்களுக்குமுன் தஞ்சையில் வள்ளுவர் சிலைக்குக் காவிச் சாயம் போன்ற வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான சட்டம் பாய்ந்து நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படிப்பட்ட அருவருப்பான சம்வங்கள் நடந்திருக்காது என்கிறார்கள் அரசியல்கட்சி தலைவர்கள்.

 கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் காவி கொடியை கட்டியதோடு சிலை மீது குப்பைகளை கொட்டிவிட்டு சென்றனர்.

இதைப்பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவே களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவற்றை அகற்றினர். இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் குழித்துறை பகுதியில் திரண்டனர் .

அவர்கள்  களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஏற்கனவே இந்த செயலை மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த பகுதிக்கு வந்து திமுகவினர் போராட்டம் செய்யாமல் கலைந்து சென்றனர்.

இது குறித்து பத்மநாபபுரம் சட்டமன்ற திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ் பேசும் போது... "தமிழகத்தில் தொடர்ந்து திராவிட இயக்கத் தலைவர்கள் சிலைகள்மீது அவமதிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவம் மதவாத சக்திகளால் அரங்கேற்றப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் இதை செய்ததாக தெரிவிக்கின்றனர்.

இதன் பின்னணியில் யாராவது இருந்து செயல்படுகிறார்களா? என்பதை காவல்துறை விசாரிக்க வேண்டும் அப்படி யாராவது இதன் பின்னணியில் செயல்பட்டால் அதை கண்டித்து திமுக கடுமையான போராட்டங்கள் நடத்தும் திராவிட இயக்கத் தலைவர்களை அவமதிக்க அனுமதிக்க மாட்டோம். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் யார் செய்தாலும் திமுக சார்பில் மிகப் பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

, இப்படிப்பட்ட அருவருப்பான அரசியல், இந்து மத காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களால் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது. காவி புனிதத்தின் சின்னம் தானே.! என்று சொல்லுபவர்களுக்கு பாஜகவின் நிழல் ஆட்சியாக இருக்கும் அதிமுக ஒருதலைபட்சமாக... தலைவர் சிலைகளை அவமானப்படுத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமாக இருக்கிறது. பாஜகவின் தமிழ்மாநில தலைவராக முருகன் பொறுப்பேற்ற பிறகுதான் தலைவர்கள் சிலைகள் மீது காவி அடையாளம் வீசப்படுவதாக அரசியல் கட்சி தலைவர்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். தலைவர்கள் சிலைக்கு காவியை கட்டி அவர்களை அசிங்கப்படுத்தி தமிழகத்தில் பாஜக காலுன்ற முடியாது என்கிறார்கள் திமுகவினர்.திமுகவினர் அண்ணாசிலையை கழுவி சுத்தம் செய்து குப்பைகளை அகற்றிவிட்டு மாலை அணிவித்து அங்கிருந்து சென்றிருக்கிறார்கள்.

பாஜக செல்வாக்கு பெற்ற மாவட்டமான  கன்னியாகுமரியில் அண்ணாசிலை அவமரியாதை செய்யப்பட்டிருப்பது மேலும் அரசியல் சூட்டை அதிகப்படுத்தியிருக்கிறது.