Asianet News TamilAsianet News Tamil

'நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’- எம்.ஜி.ஆரை நெகிழ வைத்த நெஞ்சங்கள்

mgr memories-zd8xh3
Author
First Published Dec 24, 2016, 1:20 PM IST


ஒருமுறை திருச்சிக்கு வந்த  எம்.ஜி.ஆர்.வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியை அறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள்.

அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர்.

mgr memories-zd8xh3

கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!'' மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன் என்றார்.

அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள்.

 அவர்களைப் பார்த்ததுமே காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’ என்று தடுத்தனர்.

ஆனால், அதையும் கேட்காமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதே வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.

mgr memories-zd8xh3

முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது.

அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

mgr memories-zd8xh3

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர்.  ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார்.

mgr memories-zd8xh3

‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என கூறியதற்கு, ’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’

 இறுதிவரை சொன்னது போலவே நின்றார்."

Follow Us:
Download App:
  • android
  • ios