கம்யூனிஸ்ட் தலைவர்கள் எளிமைக்கு பெயர் போனவர்கள், ஆனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து எளிமையாக வாழ்ந்து சிறந்த அரசியல்வாதிக்கு இலக்கணமாக அனைவரும் மதிக்கும் மதிப்புமிகு வாழ்க்கை வாழ்ந்தவர் கக்கன். 

பொதுப்பணித்துறையில் கோடிகளை பார்த்து சொகுசாக வாழும் அமைச்சர்களை பார்த்த தமிழகம் அதே பொதுப்பணித்துறையில் அமைச்சராக இருந்து தெருக்கோடியில் , ஒண்டுகுடித்தனத்தில் வாழ்ந்து மறைந்த கக்கனையும் கண்டது.

செல்வாக்கு மிக்க அமைச்சராக இருந்தாலும், செப்பு காசு கூட இல்லாத கக்கன் சிகிச்சைக்காக 1980 ஆம் ஆண்டு மதுரை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம், சாதாரணமாக தரையில் கிடத்தபட்டிருந்தார் கக்கன். 

அப்போது மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக . மருத்துவமனைக்கு வந்தார். 

அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார்.அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு, ‘அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? ஐயா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்டுள்ளார். 

ஆனால் அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றுள்ளனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவந்துள்ளது.

நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: ‘ஐயா! அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா’ யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அந்த வார்டைக் காட்டுங்க’ என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்.

உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல, கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்.,

எதிரில் உள்ள நாற்காலி தானும் அமர்ந்தார். ‘தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்’ இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க, அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது.

கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும்?

சொல்லுங்க. உடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்’ என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, ‘அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்’ என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, ‘என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்’ என்று வணங்கி விடை பெற்றார்.

கக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது. ‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்’ என உத்தரவிட்டார் முதல்வர் எம்ஜிஆர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆணையிட்டார்.

அதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-இல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன்.