’மக்கள் பணத்தை வாரி இறைத்து வீண் விரயம் செய்கிறார்கள்!’ எனும் வெந்நீர் விமர்சனத்துடன் நகர்ந்து கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நிறைவை நெருங்குகிறது. இதன் நிறைவு விழா 30- மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடக்கிறது. 

இந்த விழாவில் எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் சென்னையை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரையும் சிறைப்புரையாற்ற அழைத்திருக்கிறது அரசு தரப்பு. விழா அழைப்பிதழிலும் அவர்களின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.

இந்நிலையில், சென்னை சிட்டியில் ஓடும் அரசு பேருந்துக்கள் கணிசமானவற்றின் பின்புறம் வைக்கப்பட்டுள்ள இந்த விழா குறித்த விளம்பர பதாகைகளை பார்த்த பன்னீர்செல்வம் டீமினிர் கொதித்துப் போயுள்ளனர். 

காரணம்?....அதில் எம்.ஜி.ஆர்.  படத்தோடு, ஜெயலலிதா மற்றும் எடப்பாடியா இருவரின் போட்டோக்களும் சம அளவில் இடம்பெற்றுள்ளன. ஆனால் பன்னீரின் போட்டோ ஸ்டாம்ப் சைஸில் கூட இல்லை. வெறுமனே அவரது பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதுதான் பன்னீர் அணியினரை மிக கடுமையாக கோபப்படுத்தியுள்ளது. 

’அ.தி.மு.க. அரசு நடத்தும் இந்த விழாவில் எதிர்கட்சி தலைவர் கூட அழைக்கப்பட்டு, அவரது பெயர் கொட்டை எழுத்தில் போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இந்த ஆட்சியின் துணை முதல்வர் ஆகிய பெரும் பதவிகளில் இருக்கும் பன்னீரை போட்டோ போடாமல் கேவலப்படுத்தி இருக்கிறார்கள் எடப்பாடி அணியினர். 

ஆக ஸ்டாலின், கனிமொழியை விட ஓ.பி.எஸ். இளைச்சவராகிவிட்டாரா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒடுக்கப்படும் நாங்கள் ஒரு நிமிடம் நினைத்தால் இந்த ஆட்சியையே கவிழ்த்துவிடுவோம்!” என்று பொங்கியிருக்கிறார்கள். 

மெரீனாவில் அலை கூட ஓய்ந்துவிடும். ஆனால் இந்த இரு அணிகளுக்கு இடையிலுள்ள மோதல் பஞ்சாயத்துகள் மட்டும் ஓயவே ஓயாது போல!