சர்கார் படத்தில் அ.தி.மு.க.வை சல்லி சல்லியாக பெயர்த்தெடுத்து விமர்சனம் செய்துவிட்ட விஜய், அடுத்ததாக அட்லீ இயக்கும் புதுப்படத்தில் கமிட் ஆகிவிட்டார். அப்படின்னா அரசியலுக்கு வர்லயா தம்பி? என்று ஆளாளுக்கு கேட்கிறார்கள். 

நமது ஏஸியாநெட் தமிழ் இணையதளம் ஏற்கனவே சொன்னது போல், இனி வருடத்துக்கு ஒரு படம்தான் நடிப்பது என்று முடிவெடுத்திருக்கும் விஜய், இதன் மூலம் கிடைக்கும் அநேக ஓய்வு நாட்களை தன்னை அரசியலுக்குள் அமர்த்திக் கொள்வதற்காகவே பயன்படுத்த இருக்கிறார் விஜய்! என்றே தகவல்கள் வருகின்றன. 

இதற்கிடையில் ‘அரசியலுக்கு வந்தால் ஜெயிக்க முடியுமா?’ என்று தனக்கு மிக மிக நெருங்கிய வட்டாரத்தில் அடிக்கடி ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறார் விஜய். அப்போது ‘எம்.ஜி.ஆர்.க்கு அடுத்து உங்களுக்குதான் மக்கள் மாஸ் நேர்த்தியா பொருந்தி வருது.’ என்று சிலர் பெப் கிளப்பி வருகின்றனர். ‘எப்டி யெப்டி?’ என்று விஜய் கேட்டபோது, ”அவருக்கும் உங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்குது தளபதி! அவரு அரசியலுக்குள்ளே வந்தப்ப சினிமா மூலமாதான் ஆளுங்கட்சியை அதிரவெச்சாரு. இது மூலமாக மக்கள் ஆதரவு வெள்ளமா பொங்குச்சு. 

இன்னைக்கு நீங்களும் அதைத்தான் செய்யுறீங்க. இவ்வளவு ஏன் உலகம் சுற்றும் வாலிபன் படம் வந்தப்ப, மதுரையிலிருந்துதான் புரட்சித்தலைவருக்கு முதல் எதிர்ப்பு கிளம்புச்சு. ‘இந்தப்படம் ஓடினால் நான் சேலை கட்டிக் கொள்கிறேன்’ அப்படின்னு மதுரை முத்துங்கிறவரு ஓவரா ரவுசு விட்டார். படம் சூப்பர் ஹிட். புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பிச்சதும் ஓடிப்போயி இணைஞ்சார் முத்து. 

இப்ப உங்க சினிமாவுக்கும் மதுரையில் ராஜன் செல்லப்பா மூலமாகத்தான் பெரிய களேபரம் உருவாகியிருக்குது. ஆக நீங்களும் அரசியல்ல குதிச்சு முதல்வராவீங்க.” என்று உதாரணத்தோடு உசுப்பேற்றினாராம். இப்போ இந்த ‘மதுரை சென்டிமெண்டை அசைபோட்டபடிதான் விஜய்யின் அரசியல் ஆலோசனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.’ வெளங்கிடும்!