தமிழக அமைச்சர்கள், காலையும் பிடிப்பார்கள் கழுத்தையும் பிடிப்பார்கள் என அதிமுக மீது டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அம்மா மக்கள் கட்சி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியதாவது:  எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன்.

அழைப்பிதழில் பெயர் இருப்பதால் விழாவில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை அழைப்பிதழில் பெயர் சேர்த்திருப்பது அரசியல் செய்வதற்காகவே அதிமுக அமைச்சர்களை அமமுகவில் சேர்த்தால் அதைவிட பாவம் ஒன்றும் இல்லை. ஆட்சியில் உள்ள தமிழக அமைச்சர்கள் காலையும் பிடிப்பார்கள், தேவைப்பட்டால் கழுத்தையும் பிடிப்பார்கள். 

தற்போதைய ஆட்சியாளர்கள் தங்கள் மீது சேற்றை வாரி இறைத்தாலும், அது சந்தனமாகவே தங்கள் மீது வந்து விழும். இடைத்தேர்தல் வந்தால் தான் தமிழ்நாட்டில் உண்மையாக யாருக்கு செல்வாக்கு உள்ளது என்பது தெரியவரும். திமுக, பாஜக தவிர்த்து மற்ற கட்சிகளுடன் தாம் கூட்டணி வைப்பேன். போட்டிக்கு அழைப்பவர்கள் திருவாரூரில் வந்து நின்று வெற்றிப்பெறட்டும். விஜயபாஸ்கர் ஆசைபட்டால் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு முதலில் டெபாசிட் வாங்கட்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.