தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தென்னிந்தியாவில் இருக்கும் பல்வேறு அணைக்களின் கொள்ளளவும் அதிகரித்திருக்கிறது. இதனால் கேரளா ஒரு பக்கமும், கர்நாடகா ஒருபக்கமும் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட கோரிக்கை வைத்து வருகிறது. 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்தும் கிருஷ்ணா சாகர் அணையில் இருந்தும் 1.70 லட்சம் கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் காவேரியில் நீர்வரத்து அதிகரித்து ஒகேனேகலில் வெள்ளம் பாய்ந்து ஓடியது.

தற்போது மீண்டும் இந்த இரு அணைகளில் இருந்தும் இரண்டு லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நீர்வரத்தால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் ஒகெனகலில் இதனால் வெள்ளத்தின் அளவு மேலும் அதிகரித்திருக்கிறது. அங்கு இருக்கும் மரங்களின் உயரத்திற்கு இணையாக வெள்ளம் செல்வதால் மரங்களே மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது

ஒகேனகல் அருவியில் இருக்கும் பாறைகள் கூட கண்ணிற்கு தெரியாத அளவிற்கு எங்கும் பேரிரைச்சலுடன் வெள்ள நீர் மட்டுமே தெரிகிறது. இதனால் ஒகேனகல் பகுதிக்கு 15 கிலோமீட்டர் முன்னதாகவே சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பபடுகின்றனர்.

மேட்டூர் அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் காவிரி கரையோரம் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் குமாரபாளையத்தையும், பவானியையும் இணைக்கும் பழைய பாலத்தில் பாதுகாப்பு கருதி போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

பள்ளிப்பாளையத்தில் காவிரி கரையோரம் உள்ள ஜனதாநகர், சத்யா நகர், பாவடி தெரு, நாட்டாகவுண்டன்புதூர், கந்தப்பேட்டை, அக்ரகாரம் உள்பட காவிரி கரையோரம் உள்ள 1,000க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. நள்ளிரவு 12 மணிக்கு வீடுகளுக்குள் தண்ணீர் மளமளவென புகுந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் காவேரி கரையோர மாவட்டங்களில் வெள்ள அபாயம் இருப்பதால் மக்கள் முன்னதாகவே எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றனர்.

மேட்டூரிலிருந்து பூலாம்பட்டி வழியாக எடப்பாடி செல்லும் சாலை முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது இதனால் மேட்டூர் பூலாம்பட்டி எடப்பாடி சாலை முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நேற்று அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் அவரை கரையோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றங்கரை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.