காவிரித் தாயின் புண்ணியத்தால் தளதளவென் ததும்பி நிற்கும் மேட்டூர் அணையிலிருந்தது பாசனத்துக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீர் திறந்து விடுகிறார்.

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை  நன்கு பொழிந்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தன. இதையடுத்து அங்கிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் மேட்டுர் அணை தற்போது 105 அடிகளுக்கு மேல் பேருகி கடல் போல் காட்சியளிக்கிறது.

இதையடுத்து டெல்டா பாசன விவசாயத்துக்காக மேட்டூர் அணை  இன்று திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை திறப்பை சிறப்பான நிகழ்வாக அமைக்கும் வகையில், முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி நேரில் பங்கேற்கிறார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணையை அவர் திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டாக்டர் சரோஜா, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செம்மலை உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (18-ந் தேதி) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்குச் சென்றார். அங்கிருந்து சேலம் சென்ற அவர், இன்று காலையில் மேட்டூர் அணைக்குச் சென்று தண்ணீரை திறந்து விடுகிறார்.

டெல்டா பாசனத்துக்காக அணை திறக்கப்படும்போது, அந்த பகுதி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கம். ஆனால் இந்த முறை முதலமைச்சரே   பங்கேற்று மேட்டூர் அணையில் நீர் திறப்பது முதல் முறையாக நடப்பது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.