5 ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து 16 கண் பாலம் வழியாக கூடுதல் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணை 39 ஆவது முறையாக நிரம்பியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் 2 அணைகளில் இருந்தும் கடந்த வாரம் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பின்னர் இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இந்தநிலையில், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக இருந்தது. தற்போது கர்நாடக அணைகளில் இருந்து 80 ஆயிரம்  கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட பல மடங்கு அதிகரித்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது.  தற்போது பாசனத்திற்காக திறந்துவிடப்படும் நீர் 30000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி 119.41   அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்., தற்போது மேட்டுர் டேம் 39 ஆவது முறையாக நிரம்பியுள்ளது.

தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் 16 கண் பாலம் வழியாக நேற்று இரவு 8 மணி முதல் 8000 கன உபரி நீர் திறந்துவிடப்பட்டது. அது தற்போது 30000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் 16 கண் பாலம் பகுதியையட்டி அமைந்துள்ள தங்கமாபுரி பட்டினம் மற்றும் காவிரி கரையையட்டிய கோல்நாயக்கன்பட்டி உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் வருவாய்த்துறை மூலம் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இரவு 8 மணி முதல் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

எனவே பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரை மற்றும் கால்வாய் கரை பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும், நீச்சல் அடிப்பதையோ, செல்பி எடுப்பதையோ, காவிரி ஆற்றின் கரையில் நின்று தண்ணீர் வரத்தை வேடிக்கை பார்ப்பதையோ தவிர்க்க வேண்டும் என்றும் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.