‘குரங்குக் குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல’என்பார்களே... அந்த மாதிரி இருக்கிறது திமுகவின் சமீபகால செயல்பாடுகள். இதன் ஒரு பகுதியாக வரும் சட்டசபை தேர்தலில் திமுக 200 இடங்களில் போட்டியிடப் போவதாக முதலில் செய்தி கசியவிடப்பட்டது. ’அப்படியானால் தங்களுக்கு மீதமுள்ள 34 தொகுதிகள்தானா!’ என அந்தக் கூட்டணியில் இருக்கும் அரை டஜனுக்கும் மேற்பட்ட கட்சிகள் கொதிக்க ஆரம்பித்தன. இது தொடர்பாக ஊடகங்களிலும் விவாதங்கள் அரங்கேறி சூட்டைக் கிளப்பின. உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கம்போல ’இது எதிரணியின் சதி’ என சாமாளிக்க முயற்சித்தார்.

இப்போது அடுத்தக் கட்டம். திமுக தேர்தல் வியூக பொறுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அண்மையில் ஸ்டாலினை சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட்டே ஆக வேண்டும் என்கிற தனது நிலைப்பாட்டை கிஷோர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கிறார். ’இப்படி செய்தால் கூட்டணி கட்சிகள் அதிருப்தியடையுமே!’ என ஸ்டாலின் சொல்ல, நீண்ட விவாதத்திற்கு பிறகு ஒரு இறுதி முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதன்படி கடந்த எம்.பி தேர்தலில் ஒவ்வொரு கூட்டணி கட்சியும் வெற்றிபெற்ற இடங்களுக்கு தலா 3 முதல் 4 இடங்கள் வரை தருவது என முடிவெடுக்கப்பட்டது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் தவிர, மற்ற கட்சிகள் பாதி இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் ; மீதி இடங்களில் விரும்பும் சின்னத்தில் போட்டியிட்டுக் கொள்ளலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு கூட்டணி கட்சிகள் எப்படி ரெஸ்பான்ஸ் செய்யும் என்பதை தெரிந்துகொள்ளும் ஆவலில் இது தொடர்பான செய்திகளை சில பத்திரிகையாளர்கள் மூலம் கசிய விட்டிருக்கின்றனர். செய்தியறிந்து கூட்டணி கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக மதிமுக, விசிகவில் திமுகவிற்கு எதிரான அதிருப்தி அலை அதிகமாக இருக்கிறது.

‘’திமுக பார்முலாபடி நாம இரண்டு மூன்று இடங்களில்தான் ஒரே சின்னத்தில் போட்டியிட முடியும். மற்றபடி உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டாக வேண்டும்.இப்படி நம்பவெச்சு  கழுத்தை அறுக்கிறாங்களே!’’ என கொதிக்கிறார்கள் இந்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள். திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அடுத்து எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது பற்றி மதிமுக, விசிக தலைவர்கள் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளில் தங்களுடன் இணைந்து செயல்படுமாறு கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் உள்ளிட்ட இயக்கங்களுக்கும் இரு கட்சிகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.