ஒரு காலத்தில் ராமர் லட்சுமணன் போல் ஒற்றுமையாக இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலஜியும், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனும் தற்போது இந்தியா – பாகிஸ்தான் போல் மோதிக் கொள்வது விருதுநகர்மாவட்ட அதிமுகவையோ கலகலக்க வைத்துள்ளது.

ஒரு காலத்தில் ராமர் லட்சுமணன் போல் ஒற்றுமையாக இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலஜியும், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனும் தற்போது இந்தியா – பாகிஸ்தான் போல் மோதிக் கொள்வது விருதுநகர்மாவட்ட அதிமுகவையோ கலகலக்க வைத்துள்ளது.

அதிமுகவில் சாதாரண தொண்டராக சேர்ந்து சிவகாசி நகராட்சி கவுன்சிலர் பதவி தொடங்கி தற்போது அமைச்சராக உயர்ந்திருப்பவர் ராஜேந்திர பாலாஜி. கடந்த 2011ம் ஆண்டு முதல்தற்போது வரை சுமார் 10 வருடங்களாக விருதுநகர் மாவட்டத்தில் அசைக்க முடியாத அதிகார மையமாக ராஜேந்திர பாலாஜி திகழ்ந்து வருகிறார். இவர் கட்ட பிரம்மச்சாரி என்கிறார்கள். ஆனால் துவக்க காலம் முதலே ராஜவர்மன் இவருக்கு மிகவும் நெருக்கம். சாதாரண தொண்டராக இருந்த ராஜேந்திர பாலாஜி அமைச்சரானதில் ராஜவர்மனின் பங்கும் இருப்பதாக அங்கிருப்பவர்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

அந்த அளவிற்கு ராஜேந்திர பாலாஜிக்காக தேர்தல் பணிகள் தொடங்கி அனைத்து பணிகளையும் ராஜவர்மன் செய்து வந்துள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நிழலாக செயல்பட்டு வந்த ராஜவர்மனுக்கு சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி கொடுத்ததும் அவர் தான். ஆனால் ராஜவர்மன் எம்எல்ஏ ஆன பிறகு ராஜேந்திர பாலாஜியுடன் மோதல் வெடித்தது. இதற்கு மிக முக்கிய காரணம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து ராஜவர்மனை ஒருமையில் பேசியது தான் என்கிறார்கள்.

கட்சிக்காரர்கள், தொகுதி மக்கள் முன்னிலையில் எம்எல்ஏ ராஜவர்மனை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவனே இவனே, டேய் என்று ஒருமையில் பேசியுள்ளார். இதனை தவிர்க்குமாறு ராஜவர்மன் கூறியது தான் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி என்கிறார்கள். ஒரு கட்டத்தில் தன்னை பொதுமக்கள் மத்தியிலும், கட்சிக்காரர்கள் மத்தியிலும் ஒருமையில் பேச வேண்டாம் என்று அமைச்சரிடம் ராஜவர்மன் கூற அவர் வெகுண்டு எழுந்து பேச்சை அதிகமாக்கியதாக கூறுகிறார்கள். என்னால் எம்எல்ஏ ஆகிவிட்டு எனக்கே ஆர்டர் போடுகிறாயா என்று ராஜவர்மனை விரட்டியதாக சொல்கிறார்கள்.

இதே பாணியில் விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை ராஜேந்திர பாலாஜி மதிப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இதற்கிடையே பாஜகவிற்கு ஆதரவாக ராஜேந்திர பாலாஜி பேசிய பேச்சு எடப்பாடி – ஓபிஎஸ்சை டென்சன் ஆக்கியது. இதனால் அவரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதனை ராஜவர்மன் மற்றும் அதிமுக நிர்வாகிகள்பட்டாசு வெடித்து விருதுநகரில் கொண்டாடினர். இந்த சூழலை பயன்படுத்தி விருதுநகர் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளை ராஜவர்மன் தன் வசப்படுத்தினார் என்கிறார்கள். பெரும்பாலான ஒன்றியச் செயலாளர்கள் ராஜவர்மன் ஆதரவாளர்களாகினர்.

இதற்கிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி – துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சை சந்தித்து விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியை பெற ராஜவர்மன் முயன்றார். ஆனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணியிடம் சரண்டர் ஆகி மீண்டும் மாவட்ட பொறுப்பாளராகிவிட்டார். இதன் பிறகு ராஜவர்மனுக்கு ராஜேந்திர பாலாஜி அதிக குடைசல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் தான் தனது ஆதரவாளர்களை கூட்டி சாத்தூரில் தனது செல்வாக்கை நிருபித்துள்ளார் ராஜவர்மன். அத்தோடு அமைச்சர் தரப்பில் இருந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் போட்டு உடைத்துள்ளார். இந்த அத்தனைக்கும் அமைச்சர் – எம்எல்ஏ இடையிலான ஈகோவை தவிர வேறு ஒன்றும் காரணம் இல்லை என்று கூறுகிறார்கள் விருதுநகர் மாவட்ட அதிமுகவினர்.