விவசாயிகளுக்கு மானியம் என்ற பெயரில் மெகா ஊழல்! முதல்வரே இதுக்கு விளக்கம் சொல்லுங்கள்!ஆதாரத்துடன் வானதி புகார்?
இப்படி இனக்கவர்ச்சி பொறி கொள்முதலில் மெகா முறைகேடு நடைபெற்றிருப்பதை, கோபிச்செட்டிப்பாளையம் கொடிவேரி அணை- பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயி சங்கங்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன.
காண்டாமிருக வண்டு இனக்கவர்ச்சி பொறியை, சந்தை விலையைவிட நான்கு மடங்கு அதிக விலைக்கு வேளாண்துறை வாங்குகிறது என்று குற்றம்சாட்டியுள்ள வானதி சீனிவாசன், தமிழக அரசு இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாஜக மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழக வேளாண் துறை சார்பில், காண்டாமிருக வண்டுகளை ஒழிக்க, தென்னை விவசாயிகளுக்கு, மானிய விலையில், 'ரைனோலூர்' என்ற இனக்கவர்ச்சிப் பொறி வழங்கப்படுகிறது. ஒரு மூடப்பட்ட பிளாஸ்டிக் பக்கெட் போன்ற உபகரணம் மற்றும் இரண்டு பாக்கெட்டுகள் மருந்துடன் இந்த இனக்கவர்ச்சி பொறி வழங்கப்படுகிறது. காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்த, வேளாண் துறை, வேளாண் பல்கலைக்கழகம் இதனை பரிந்துரை செய்கின்றன.
இதையும் படிங்க;- ரொம்ப அதிர்ச்சியா இருக்கு! கோர்ட் வளாகத்திலேயே இப்படியா? சட்டம்-ஒழுங்கு சீரழிந்து போச்சு! திமுகவை விளாசும் BJP
வேளாண் துறை இந்த பொறியை, 'கிரீனிகான் அக்ரோடெக்' என்ற சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து, 1,400 ரூபால் அடக்க விலை மற்றும் ஜி.எஸ்.டி., 252 ரூபாய் சேர்த்து ஒரு பொறி 1,652 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. அடக்கவிலையான, 1,400 ரூபாயில் 50 சதவீத மானியமாக, 700 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., 252 ரூபாய் சேர்த்து, விவசாயிகளுக்கு 952 ரூபாய்க்கு வேளாண்துறை விற்பனை செய்கிறது. ஆனால், இந்த இனக்கவர்ச்சிப் பொறி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள பல தனியார் கடைகளில் 360 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை கிடைக்கிறது. ஆனால் வேளாண் துறை, இந்த பொறியை, மூன்று, நான்கு மடங்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்கிறது. தனியார் உரக் கடைகளில் கிடைக்கும் விலையைவிட, இரு மடங்கு அதிக விலைக்கு விவசாயிகளுக்கு விற்கிறது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இணைய தளத்திலேயே, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், இந்த இனக்கவர்ச்சிப் பொறி, எங்கெங்கு கிடைக்கும் என்ற தகவலும் இடம்பெற்றுள்ளது. அதிலும், சராசரி விலை, 450 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி இனக்கவர்ச்சி பொறி கொள்முதலில் மெகா முறைகேடு நடைபெற்றிருப்பதை, கோபிச்செட்டிப்பாளையம் கொடிவேரி அணை- பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயி சங்கங்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன.
இதையும் படிங்க;- பொருளாதார புலி என்று மார்தட்டி கொள்ளும் சிதம்பரம் வாய் திறப்பாரா? நாராயணன் திருப்பதி கேள்வி..!
விவசாயிகளுக்கு மானியம் வழங்குகிறோம் என்ற பெயரில் நடந்துள்ள, மெகா ஊழல் குறித்து, தமிழக அரசு முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விவசாயிகள் பெயரை பயன்படுத்தி நடக்கும் இந்த மெகா முறைகேடு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கம் அளிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.