2 ஆயிரம் கோடி பாக்கியை வழங்க வலியுறுத்தி அக்.25 முதல் கரும்பு விவசாயிகள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துடன் இன்று காலை தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சர்க்கரை ஆலைகளில் உள்ள நிலுவை தொகை ரூபாய் 2,000 கோடியை உடனடியாக வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு கூட்டுறவு சக்கரை ஆலைகளில் 350 கோடி ரூபாயும், தனியார் சர்க்கரை ஆலைகளில் 1,650 கோடி ரூபாயும் பாக்கி வைத்திருப்பதாக கரும்பு விவசாயிகள் தரப்பில் கூறி வருகிறார்கள். 

இந்த நிலுவைத் தொகையை வழங்கக் கோரி அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை பல்வேறு போராட்டங்களை நடத்தி விட்டார்கள். ஆனாலும் வேளாண் துறை அமைச்சரோ, சர்க்கரை துறை ஆணையரோ கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கவோ அல்லது தனியார் சர்க்கரை ஆலைகளிடம் உள்ள நிலுவைத் தொகையை பெற்றுத் தரவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்களின் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் குதித்தார்கள்

இந்நிலையில் போராட்டத்தை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு வருமாறு அரசு தரப்பில் அழைப்பு விடுத்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை துவங்குகிறது.