Meenakshi temple Pasubadeeswarar sannthi roof fall down

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை திடீரென இடித்து விழுந்தது. அன்னை மீனாட்சி திருத்தலத்தில் அடுத்தடுத்து ஏற்படும் இத்தகைய சோகத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தததுடன் கண்ணீர் விட்டு அழுதனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது. இதையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த வெள்ளி கிழமை இரவு சுமார் 10.30 மணிக்கு மேல் கடை ஒன்றில் இருந்து தீடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென அடுத்துடத்த கடைகளுக்கும் பரவியது.

கோவில் வளாகத்துக்குள் தீ பிடித்து எரிவதைப் பார்த்த பக்தர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

மேற்கு சித்திரை வீதியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. உடனே அருகில் உள்ள மற்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், மாநகராட்சி தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 3 மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்பலாகின.

இந்த சம்பவத்தில் வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. சில கல் உத்திரங்களும் இடிந்தன. மண்டபம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அங்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. எனினும் சுந்தரேசுவரரையும், மீனாட்சி அம்மனையும் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தீ விபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் செலலூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். 6 மாதங்களுக்கு தீபிடித்து எரிந்த பகுதி முழுவதும் புதுப்பிக்கப்படும் என ஒபிஎஸ் அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் சேதமடைந்த பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த மேற்கூரை பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்..