மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, அந்த கோவில் வளாகத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட தீ விபத்துக்கு நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை  இழந்து தவித்து வருகிறோம் என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீரவசந்தராய மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மண்டபத்தின் மேற்கூரை மற்றும் பசுபதீஸ்வரர் சந்நிதியின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன.

கோவிலில் உள்ள 36 கடைகளும் எரிந்து சாம்பலாகியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோவிலுக்குள் இருக்கும் கடைகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோவிலுக்குள் இருக்கும் கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கடைகள் அகற்றப்பட்டன.இதே போல் கும்பகோணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயலில் கருவறையிலும் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், கோயில்களில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை உத்தரவிட்டது.

அதன்படி, கோயில் வளாகத்தில், தீத்தடுப்பு கருவிகள் பொருத்த வேண்டும்  என்றும், தீ விபத்துக்களை தடுக்க கோயில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோயில் தூண்களில் பக்தரகள் எண்ணெய், நெய் தீபம் ஏற்றுவதால், அது அந்த தூண்களில் படிந்து தீ விபத்துக்கு வழிவகுப்பதாகவும், எனவே பாதுகாப்பு கருதி கோயில் வளாகத்தில் நெய், தீபம் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள கடைகளையும் அகற்ற உத்தவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயில்களில் கடை வைத்திருத்திருக்கும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர்விட்டு அழுகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் வளாகத்தில் கடை வைத்துள்ள நாங்கள் திடீரென காலி பண்ணச் சொன்னால் எங்கே போவது என வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் கோயில் நிர்வாகம் சரியல்லை என்பதால் தான் தீ விபத்து  ஏற்பட்டதாகவும்,  தீ விபத்துக்கும் கடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.