Medicine did not let me see - Doctor Swaminathan

ஜெயலலிதாவுக்கு இதய முடக்கம் ஏற்பட்டபோது, தான் மருத்துவமனையில்தான் இருந்தேன் என்றும் ஆனால் சிகிச்சை அளிக்க தன்னை அனுமதிக்கவில்லை என்று அரசு மருத்துவர் சாமிநாதன் கூறியுள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார். 

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்தது

இந்த ஆணையம் முன்பாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன், தீபாவின் சகோதரர் தீபக், திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட பலர் ஆணையம் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்தனர்.

ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமி, ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதேபோல், தமிழக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று இரண்டாவது முறையாக ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளைக் கேட்டார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சுவாமிநாதன் இன்று ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இதன் பின்பு டாக்டர் சாமிநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு இதய முடக்கம் ஏற்பட்டபோது மருத்துவமனையில்தான் இருந்தேன் என்றும் ஆனால், சிகிச்சை அளிக்க தன்னை அனுமதிக்கவில்லை என்றார்.

ஜெயலலிதாவுக்கு இதய முடக்கம் ஏற்பட்டபோது இதய சிகிச்சை நிபுணரை சிகிச்சை அளிக்க அனுமதிக்காதது ஏன் என்றும் அவ்வாறு உத்தரவிட்டது யார் என்றும் ஆணையத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.