கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகள், கொரோனா தனிமைப்படுத்துதல் முகாம்கள் , கொரோனா பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிவரும்  மருத்துவக் கழிவுகளின் மூலம் கொரோனா நோய் பரவும் ஆபத்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவக் கழிவுகளின் மூலம் கொரோனா நோய் பரவலை தடுக்க, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) கடந்த ஏப்ரல் 19ம் தேதி மறுஆய்வு செய்யப்பட்ட விரிவான வரைமுறையினை வெளியிட்டது, அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள மருத்துவக்கழிவுகள் மேலாண்மை விதிகளின் படி(Bio Medical Waste Management Rules 2016ன்) மருத்துவ கழிவுகள் மற்ற மாநகராட்சி திடக் கழிவுகளுடன் சேராமல் இருக்க ஐந்து வெவ்வேறு நிற சேகரிப்பு பைகளை கொண்டு பிரித்தெடுக்கவும், அதோடு சேர்த்து கூடுதலாக கழிவை கையாளும் போது கசிவு ஏற்படுவதை தடுக்க, அக்கழிவுகளை இரண்டடுக்கு பாதுகாப்புள்ள பைகளில் எடுத்துசெல்ல வலியுறுத்தியுள்ளன. 

கொரோனா வார்டுகளில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை எளிதில் அடையாளப்படுத்தும் விதத்திலும், அதை உடனடியாக அப்புறப்படுத்துவதற்காகவும் கொரோனா கழிவுகள் சேகரிக்கப்பட்ட பைகளில் “Covid-19 waste” என எழுதி அடையாளப்படுத்த வேண்டும்.
கொரோனா கழிவு மற்ற மருத்துவ கழிவுகளுடன் கலக்காமல் இருப்பதற்கு  மருத்துவமனைகள், கொரோனா கழிவுகளை தனியாக ஒரு அறையில் சேகரித்து வைக்க வேண்டும் அல்லது சம்மந்தபட்ட வார்டில் இருந்தபடியே நேரடியாக Treatment Facilityக்கு அனுப்பி வைக்கவேண்டும்
எனவும் வலியுறுத்தியுள்ளது. மருத்துவமனையில் சுகாதார மையத்தில் இருந்து வெளியேறும் கொரோனா கழிவுகள் தனியாக பதிவு செய்யப்பட வேண்டும். 1 % Sodium Hypochlorite கொண்டு கழிவுகளை அகற்ற பயன்படும் பைகள், தொட்டிகள், தள்ளுவண்டிகள், வாகனங்கள் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.இவையெல்லாம் மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் கொரோனா கழிவுகளை கையாளுவதற்காக, பிரத்தியோகமாக வெளியிட்டிருக்கும் விதிமுறைகளின் சாராம்சங்களாக உள்ளன. 

ஆனால் இதையும் தாண்டி கொரோனா கழிவுகளை கையாள்வதில் தமிழ்நாடு அரசாங்கம் பிரத்தியேக கவனத்துடன்  செயல்பட வேண்டும் என பல்வேறு சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் நாள் ஒன்றிற்கு 47 டன் மருத்துவ கழிவுகள் உற்பத்தியாவதாக தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தகவல் மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 34 டன் மருத்துவ கழிவுகளை கையாளக்கூடிய 11 CBMWTFகள் மட்டுமே உள்ளன. சென்னையில் உற்பத்தியாகும் மருத்துவக்கழிவுகளில் வெறும் 25 சதவிகிதத்தை மட்டுமே பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த கட்டமைப்புகள் உள்ளன. மீதமுள்ள மருத்துவ கழிவுகள் முறையாக கையாளப்படாமல், எந்தவிதமான பாதுகாப்புமில்லாமல் குழிதோண்டி புதைக்கப்படுவதும், மாநகராட்சி திடக்கழிவுகளுடன் இந்த மருத்துவக் கழிவுகள் கலப்பதும் இயல்பாக நடைபெறுவதால்தான், தொடர்ந்து நீர்நிலைகளில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் என்ற செய்தியினை அவ்வப்பொழுது செய்திகளில் பார்த்து வருகிறோம். 

(சமீபத்தில் சென்னை அனைகாப்புத்தூர், மண்ணிவாக்கம், புழல் உள்ள நீர்நிலைகளில் டன்  கணக்கில் கண்டெடுக்கப்பட்ட மருத்துவ கழிவுகள் இதற்கு ஒரு உதாரணம்). இப்படி ஏற்கனவே மருத்துவக் கழிவு மேலாண்மை தமிழகத்தில் கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில் தற்போது கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் அதிகரித்துவரும் மருத்துவ கழிவுகளை முறையாக கையாள வேண்டும் எல்லை என்றால், கொரோனா தொற்று மேலும் அதிகரித்து தமிழகம் எங்கும் பரவும் ஆபத்து ஏற்படும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.