திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றுள்ளது. இக்கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளை திமுகவின் சின்னமான உதயசூரியனில் போட்டியிடும்படி திமுக வலியுறுத்தி வருவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றும் அதைக் கருத்தைத் தெரிவித்துள்ளார் வைகோ.
இன்று அவர் செய்தியாளர்களை வைகோ சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதிமுகவின் தனித்தன்மையைக் காக்க தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம். இந்த விவகாரத்தில் எந்த வலியுறுத்தலும் எங்களுக்கு வரவில்லை. அதிமுக அரசின் ஊழல் குறித்து ஆளுநரிடம் திமுக புகார் அளித்திருக்கிறது. இதில் தாமதம் ஏற்பட்டால், நீதிமன்றம் சென்று நடவடிக்கை எடுக்க திட்டமிடுவோம். இதேபோல 7 தமிழர்கள் விடுதலையில் ஆளுநர் ஏன் தாமதம் செய்கிறார் என்று தெரியவில்லை. இதன் பின்புலத்தில் பாஜக இருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது.


ரஜினி கட்சி தொடங்காமல் போனதால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பதையெல்லாம் கூற முடியாது. 1996-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரஜினி கொடுத்த வாய்ஸ் எனக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. என்னைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் களத்தில் யாருக்கும் அவர் ஆதரவு அளிக்கமாட்டார்.” என்று வைகோ தெரிவித்தார்.