நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டி இடுகின்றன. அதே நேரத்தில் அந்தக் கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வர பாஜக பெரும் முயற்சி எடுத்து வருகிறது. 

ஆனால் பாமகவுக்கு ஒதுக்கிய தொகுதிகள் தங்களுக்கும் வேண்டும் என அக்கட்சி அடம் பிடிப்பதால் பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இன்னொரு புறம் திமுகவுடனும் தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து திமுக தேமுதிகவுக்காக காத்திருக்கிறது. அதற்காக தனது தோழமைக்கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இந்நிலையில் அ.தி.மு.க., - தி.மு.க., என, மாறி மாறி பேசி, கூட்டணி பேரம் நடத்தி வரும், தே.மு.தி.க.,வுக்காக, நாங்கள் காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டுமா ?  என மதிமுக, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எடும் எரிச்சலுடன் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்த கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தை முடிந்ததுடன் இது வரை அடுத்த கட்ட பேச்சு வார்ததை நடைபெறவில்லை. இந்திய யூனியன் முஸ்லீல் லீக், கொமதேக, இந்திய ஜனநாயக கட்சி போன்ற சிறிய கட்சிகளுக்கு எல்லாம் சீட் ஒதுக்கிக் கொடுத்த திமுக தங்களை கண்டு கொள்ளாமல், கூட்டணிக்காக பேரம் பேசி வரும் தேமுதிகவுக்காக காத்திருப்பதால் ஆந்திரமடைந்த அக்கட்சிகள் தற்போது கூட்டணியில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே தோழமை கட்சிகளை மேலும் காக்க வைப்பது, கூட்டணியில், குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், அக்கட்சிகளுடன் இன்று முதல் இரண்டாம் கட்ட பேச்சை துவக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக, நேற்றிரவு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடியுமா? அல்லது இழுத்துக் கடத்தப்படுமா ? அல்லது மதிமுக, விசிக, இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறுமா? என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்