மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும், ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 

நேற்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அண்ணா அறிவாலயம் வந்த வைகோ, பேச்சு வார்த்தை நடத்தாமலேயே கிளம்பிச் சென்றார். வைகோ 3 தொகுதிகள் கேட்டு வருவதாகவும், அதனை கொடுக்க திமுக தலைமை மறுத்து வந்ததாகவும் கூறப்பட்டது. திமுக கூட்டணியில் மதிமுக சேருவதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த நிலையில், திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.  

இதனையடுத்து சென்னை தாயகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் உயர்நிலைக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னை தாயகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் உயர்நிலைக் குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்காக அண்ணா அறிவாலயம் நடந்தது. 

அவருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும், ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா உறுப்பினராக வைகோ தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவு தருவதாக வைகோ அறிவித்துள்ளார்.