இன்று தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கமலுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை எதிர்பார்த்த விசிகவுக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. “சனாதன பாஜக ஆபத்தில் தமிழகம் இருப்பதால், திமுக கூட்டணியில் இந்தத் தொகுதிகளை ஏற்றுக்கொள்கிறோம்” என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார். திமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகளைப் பெற்றுகொண்டதால் விசிகவினரும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்கியதை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்திருக்கிறார். 

சென்னை மடிப்பாக்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய கமல் ஹாசன், ​“தமிழகத்தில் சமூகநீதியை குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் உதட்டளவில் பேசிக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு பேசுபவர்கள் சமூகநீதியை உங்கள் உயர்வுக்கு நாங்கள் போட்ட பிச்சை என்றும் சொல்கிறார்கள். சமூக நீதி என்பது பிச்சையல்ல. அது மக்களின் உரிமை. அதை புரிய வைக்கவே நவீன அரசியலை முன்னெடுத்து வந்திருக்கிறோம். சமூக நீதியை பேசுபவர்கள்தான் என்னுடைய தம்பி திருமாவளவனுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளனர். என்னுடைய தம்பி இங்கு வர வேண்டியவர். அதனை அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்வோம். அனைவரும் நம்மை நோக்கி வருவார்கள் என்று பேசுகிறேன். ஆனால், எல்லோரும் அங்கு போகிறார்களே என்றுதானே நினைக்கிறீர்கள்? வர வேண்டியவர்கள் இங்கு நிச்சயம் வருவார்கள். இதுதான் வெல்லும் படை என்பதை மக்கள் வாயிலிருந்து வருவதால், அதை எங்களால் உணர முடிகிறது” என கூறினார். 

கமல் ஹாசனின் இந்த பேச்சால் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் இன்று தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கமலுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகளை உரிய மரியாதையுடன் நடத்தி வருவதாகவும், கமல் ஹாசன் பேசியுள்ளது தவறான கருத்து. விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக உரிய கெளரவத்துடன் தான் நடத்தியுள்ளது எனக்கூறினார்.

மக்கள் நீதி மய்யம் தலைமையில் உருவாக உள்ள 3வது அணியுடன் மதிமுக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ “தமிழக சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பே இல்லை என்றும், கமல் ஹாசனின் கூட்டணியில் மதிமுக சேராது” என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.