Asianet News TamilAsianet News Tamil

நாட்டுக்கே வழிகாட்டியவர் கருணாநிதி... உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பூரித்துபோன வைகோ!

1989ல் கருணாநிதி முதல்வர் பொறுப்பில் இருந்தபோது, பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி, நாட்டுக்கே வழிகாட்டினார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

MDMK GS Vaiko on supreme court verdict
Author
Chennai, First Published Aug 11, 2020, 8:45 PM IST

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் 2005ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, மகளுக்கும் சொத்து உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், பெற்றோரின் சொத்துகளில் மகனுக்கு இருக்கும் உரிமை, மகளுக்கும் உண்டு என்று இந்து வாரிசு உரிமைச் சட்டத் திருத்தம் சம உரிமை வழங்குகிறது என நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு 2018 பிப்ரவரி 3ம் தேதி தீர்ப்பு அளித்தது. தற்போது இதுதொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்பதை மீண்டும் உறுதி செய்து, இன்று வழங்கி இருக்கின்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

MDMK GS Vaiko on supreme court verdict
மகள் எப்போதுமே அன்புக்குரிய மகள்தான், தங்களது வாழ்நாள் முழுவதும் என நீதிபதி அருண் மிஸ்ரா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்து வாரிசு உரிமைச் சட்டம் 2005, பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு இருக்கும் சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்திற்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி உள்ளது. 1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டில், ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான சொத்து உரிமை, வாரிசு உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பின்னர் 1989ல் கருணாநிதி முதல்வர் பொறுப்பில் இருந்தபோது, பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி, நாட்டுக்கே வழிகாட்டினார்.

MDMK GS Vaiko on supreme court verdict
இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். கருணாநிதி பெண்கள் சம உரிமை பெற 1989ம் ஆண்டு நிறைவேற்றிய சட்டம், கலங்கரை விளக்கமாகத் திகழ்வதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.” என்று அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios