மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவுடன் இனி செல்ஃபி எடுக்க வேண்டும் என்றால் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என மதிமுக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

கட்சிக்கு நிதி வசூலிக்க வேறு வழி இல்லையா என பொதுமக்கள் மத்தியில் விமர்சனமும் எழுந்துள்ளது. சிறந்த பாராளுமன்றவாதி என்று பெயரெடுத்த வைகோ , 28 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுகவின் ஆதரவில் மாநிலங்களவை எம்.பி.யாகி உள்ளார். அவையில் எழும் அத்தனை பிரச்சனைகளுக்கும் உடனுக்குடன் வைகோ எதிர்வினையாற்றி தன்னுடைய வாதத்தை முன்வைத்து வருகிறார். அவரின் பாராளுமன்ற உரைகள் சமூக வலைதளங்களில் பரவி அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது. 

சில மாதங்களுக்கு முன்பு வைகோவை வைத்து அவரை கலாய்த்து மீம்ஸ்கள் வெளியாக வந்த நிலையில் வைகோவின் உணர்வு பூர்வ பாராளுமன்ற உரைகள் இளம் தலைமுறையினரை ரசிக்க வைத்துள்ளது. வைகோ வந்து செல்லும் விமான நிலையம் கட்சி அலுவலகம் மற்றும் பொதுக்கூட்ட மேடைகள் என அவருடன் புகைப்படம் எடுக்க மதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நிலவரத்தை உணர்ந்து கொண்ட மதிமுக கட்சி நிர்வாகத்தினர், இனி 100 ரூபாய் கொடுத்தால் மட்டுமே வைகோவுடன் போட்டோ எடுக்க முடியும் என மதிமுக தலைமை கராராக கூறியுள்ளது. 

அத்துடன் வைகோவை பார்க்க வருபவர்கள் பூச்செண்டு, சால்வை, போன்றவற்றை வாங்கி வருவதற்கு பதிலாக அந்த பணத்தை கட்சிக்கு நிதியாக வழங்கலாம் என புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மதிமுகவின் அந்த புதிய அறிவிப்பு மதிமுக கழகத்தினர் மத்தியில் அட பராவாயில்லையே கட்சிக்கு நிதி கொடுத்தமாதிரி இருக்கே இந்த யோசனை என ஆதரவாக பேசினாலும்,  கட்சிக்கு நிதி வசூலிக்க வேறு வழியே தெரியலயா இந்த மதிமுக காரர்களுக்கு எனவும், உண்டி குலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக செல்ஃபிக்கு 100 ரூபாய் என்று நாசுக்கு காட்டுவதா என கிண்டல் அடித்து வருகின்றனர்.