தி.மு.க.வில் ஸ்டாலினின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக வந்துவிடுவாரோ என்று கருணாநிதி பயந்து எந்த வைகோவை வெளியேற்றினாரோ அதே வைகோ, இன்று ஸ்டாலினை ‘முதல்வராக்கியே தீருவேன்’ என்று சூளுரைத்து நிற்கிறார்! ஆனால் இதை  கண்குளிர காணவும், காது குளிர கேட்கவும் தான் கருணாநிதி நலமாக இல்லை!...என்று மர்மமாக புன்னகைத்து பேசுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

கண்மூடித்தனமாக தி.மு.க.வை எதிர்த்த வைகோ இன்று அதே தி.மு.க.வை கண்ணைக் கட்டிக் கொண்டு ஆதரிக்கிறார். இதை அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?! என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகவும், ஆச்சரியக் குறியாகவும்தான் இருக்கிறது. ஆனாலும் ம.தி.மு.க. தன் அரசியல் பயணத்தை தொடரத்தான் செய்கிறது. 

இந்த சூழலில் பலவித அரசியல் கேள்விகளை எதிர்கொண்டிருக்கிறார் வைகோ. அவரிடம் ‘நடிகர்கள் நாடாள முடியுமா?’ என்று கேட்டதற்கு ‘விட்டுடுங்க’ என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்திருக்கிறார். 
இந்த நிலையில் டி.டி.வி. தினகரனுக்கு போகுமிடமெல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறதே!? என்று கேட்டதற்கு “கடற்கரையில் என் கூட்டத்துக்கு பத்து லட்சம் பேர் கூடினாங்க. கூட்டம்னா கூட்டம் அவ்வளவு கூட்டம். நான் ஜெயிச்சுடனா என்ன?” என்று நக்கலாக பதில் சொல்லியிருக்கிறார். 

ஆக தினகரனுக்கு சேரும் கூட்டம் வீணா சேரும் கூட்டம்! அதனால் எந்த அரசியல் வெற்றியும் கிட்டப்போவதில்லை! என்று சற்றே சுற்றி வளைத்துச் சொல்லியிருக்கிறார் வைகோ!...என்கிறார்கள் விமர்சகர்கள்.