அதில் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் முக்கிய பணியான குப்பை அள்ளுவதை கவுன்சிலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும், ஒவ்வொரு வார்டிலும் கவுன்சிலர்கள் தினமும் ஆய்வு செய்ய வேண்டும். 

சென்னை மாநகராட்சி வார்டுகளில் தினமும் குப்பை அள்ளுவது, கொசு மருந்து தெளிப்பதை வார்டு கவுன்சிலர்கள் கண்காணிக்க வேண்டும் என மேயர் பிரியா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேயராக பொறுப்பேற்றபோதே குடிநீர், மின்விளக்கு, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளை சரி செய்வதே தனது நோக்கம் என அவர் கூறியிருந்த நிலையில் தற்போது கவுன்சிலர்களுக்கு இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்தி அதற்கான பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில் 200 வார்டுகளிலும் மக்கள் பணியாற்ற புதிய கவுன்சிலர்கள் கடந்த மாதம் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனால் வார்டுகளில் அடிப்படை பணிகள் தற்போது வேகமாக முடிக்கி விடப்பட்டுள்ளது. சென்னையில் பெரும் சவாலாக இருந்து வரும் குப்பை அள்ளும் பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி பொருத்தவரையில் முதல் முறையாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் பிரியா ராஜன் மேயராக பொறுப்பேற்றுள்ளார். மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியுள்ள நிலையில் அதில் 12 மாநகராட்சிகளில் பெண்களுக்கு திமுக மேயர் பதவி வழங்கி உள்ளது. இந்நிலையில் பிரியா ராஜன் மேயரானது முதல் சுற்றுச்சூழன்று பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் அவர் தாக்கல் செய்தார். பெரும்பாலும் அடிப்படை பிரச்சினைகளை மையப்படுத்தி பட்ஜெட் அமைந்துள்ளது. இந்நிலையில் மேயர் பிரியா அதிரடியாக ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் முக்கிய பணியான குப்பை அள்ளுவதை கவுன்சிலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும், ஒவ்வொரு வார்டிலும் கவுன்சிலர்கள் தினமும் ஆய்வு செய்ய வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சனையான சுகாதாரம், குடிநீர் பிரச்சினைகள், கழிவுநீர் அடைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், தெருக்களில் குப்பைகள் சேகரிக்கும் சுகாதார பணியாளர்களின் வருகைப்பதிவேட்டடை கவுன்சிலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல் குப்பைத்தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

கொசு வர வாய்ப்புள்ள பகுதிகள் அனைத்திலும் கண்காணித்து அனைத்து பகுதியிலும் கொசு மருந்து தெளிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருந்து வார்டு பணிகளை கண்ணும் கருத்துமாக செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.